காவிரி நீர் வருமா, வராதா? திடீரென விசாரணையை தள்ளி வைத்த உச்ச நீதிமன்றம்: பின்னணி என்ன?

காவிரியிலிருந்து தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு 21ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

காவிரி ஆற்றிலிருந்து கர்நாடகா முறையாக தண்ணீர் திறந்துவிடாததால் டெல்டா மாவட்ட விவசாயிகள் பயிர் காய்ந்து வருவதை பார்த்து கண்ணீர் வடித்து வருகின்றனர். காவிரி ஒழுங்காற்றுக் குழு, காவிரி மேலாண்மை ஆணையம் ஆகியவற்றில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து முறையிட்டு வந்தது.

இருப்பினும் கர்நாடகா அரசு பிடிவாதமாக மறுத்து வருவதால் உச்ச நீதிமன்றத்தை நாடியது தமிழக அரசு. காவிரியிலிருந்து தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிடவேண்டும் என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. பி.ஆர்.கவாய் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த விசாரணையை செப்டம்பர் 6ஆம் தேதிக்கு (இன்றைய தினம்) பட்டியலிட்டது.

இன்று நீதிபதி பி.ஆர்.கவாய், “மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தான் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் ஆனால் தற்போது இரண்டு நீதிபதிகள் தான் இருக்கிறோம். இதனால் வழக்கு விசாரணையை செப்டம்பர் 21ஆம் தேதி ஒத்திவைக்கிறேன்” என்று கூறினார் .

முதல்வரின் காவிரி டெல்டா வருகை விவசாயிகளை வஞ்சித்து விட்டது பி .ஆர்.பாண்டியன் கண்டனம்

தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, அரசு தரப்பு வழக்கறிஞர் உமாபதி ஆகியோர் அப்படியானால் வழக்கு விசாரணையை வரும் திங்கள் கிழமையாவது நடத்த வேண்டுகோள் விடுத்தனர்.

அதையும் நிராகரித்த நீதிபதி பி.ஆர்.கவாய், அடுத்தவாரம் முழுவதும் நான் available ஆக இல்லை. எனவே விசாரணை செப்டம்பர் 21ஆம் தேதி தான் விசாரிக்க முடியும். ஒருவேளை விரைவில் இந்த வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் என்றால் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நீங்கள் அணுகலாம்” என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நீர் வராமல் பயிர்கள் காய்ந்து வருகின்றன. இந்த சூழலில் 21ஆம் தேதி தான் விசாரணை என்றால் அது தமிழக விவசாயிகளுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

தமிழ்நாடு 7200 கன அடி முதல் 15ஆயிரம் கன அடி நீர் வரை கேட்டு வருகிறது. காவிரி மேலாண்மை ஆணையமோ 5000 கன அடி நீரை திறந்துவிட உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவுமேகூட முறையாக பின்ப்பற்றப்படுவதில்லை. எனவே தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை அணுகி இந்த வழக்கு விசாரணையை விரைந்து நடத்த கோர வேண்டும் என்பதே தமிழக விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.