இந்தியாவுக்கு `பாரத்' என பெயர் மாற்றமா? – 'INDIA' கூட்டணிக்கு 'செக்' வைக்கும் பாஜக-வின் முயற்சியா?!

டெல்லியில் வரும் 9, 10-ம் தேதிகளில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற இருக்கிறது. இதில், பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இதன் ஒருபகுதியாக வரும் 9-ம் தேதி இரவு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருந்து அளிக்கிறார். இதற்கான அழைப்பிதழில் ‘President of Bharat’ என அச்சிடப்பட்டிருக்கிறது. வழக்கமாக ‘President of India’ என்றே இருக்கும் நிலையில், தற்போது இவ்வாறு அச்சிடப்பட்டிருகிறது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

திரௌபதி முர்மு

முன்னதாக எதிர்க்கட்சிகள் இணைந்து பாஜக-வுக்கு எதிராக ‘இந்தியா’ கூட்டணியைக் கட்டமைத்திருக்கிறார்கள். இந்த கூட்டணியின் இரண்டாவது கூட்டம் ஜூலை மாதம் பெங்களூரில் நடைபெற்றது. அப்போது தான் ‘இந்தியா’ என்ற பெயரும் கூட்டணிக்குச் சூட்டப்பட்டது. சமீபத்தில் இதன் மூன்றாவது கூட்டம் மும்பையிலுள்ள கிராண்ட் ஹையத் ஹோட்டலில் நடந்து முடிந்திருக்கிறது. இதில் 28 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டது குறிப்படத்தக்கது. எதிர்க்கட்சிகள் ‘இந்தியா’ கூட்டணி என பெயர் வைத்ததற்கு பாஜக-வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தற்போது அழைப்பிதழில் இவ்வாறு புதிய வழக்கத்தில் அச்சிடப்பட்டிருக்கிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்வினையாற்றி வருகிறார்கள்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், “பா.ஜ.க.வின் நாசகார புத்தியால் மக்களை எப்படி பிரிப்பது என்றுதான் சிந்திக்க முடியும். இந்தியர்களுக்கும் பாரதியர்களுக்கும் இடையே மீண்டும் பிளவை உருவாக்குகிறார்கள். நாம் தெளிவாக இருப்போம்… நாம் ஒருவரே. அரசியல் சாசனத்தின் பிரிவு 1, இந்தியா, அதாவது பாரதம், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும் எனக் கூறுகிறது. இந்தியா கூட்டணியைக் கண்டு அவர்கள் அச்சப்படுவதால் இதுபோன்ற அற்ப அரசியலைச் செய்கிறார்கள். பிரதமர் மோடி, உங்களால் என்ன முடியுமோ, அதைச் செய்யுங்கள். ஆனாலும், பாரதம் இணையும்… இந்தியா வெல்லும்” என தெரிவித்திருக்கிறார்.

காங்கிரஸ் எம்.பி கே.சி.வேணுகோபால்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “பா.ஜ.க ஆட்சியை வீழ்த்தும் கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் சூட்டியதில் இருந்து பா.ஜ.க.வுக்கு இந்தியா என்ற சொல்லே கசந்து வருகிறது. இந்தியாவை வளர்ச்சிமிகு இந்தியாவாக மாற்றப் போகிறோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியால், ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா என்ற பெயரை மட்டும்தான் மாற்ற முடிந்திருக்கிறது. அரண்டவர் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப் போல இந்தியா என்ற சொல்லே பாஜகவை மிரட்டுகிறது. தேர்தலில் இந்தியா என்ற சொல்லே பாஜகவை விரட்டும்” என தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், “ஆர்.எஸ்.எஸ்-ன் லட்சியம் அகண்ட பாரதம். காஷ்மீரில் ஆர்டிகிள் 370-யை எடுக்க வேண்டும். ராமர் கோவில் கட்ட வேண்டும். பொது சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும் என்பது போல் பாரத் என்று இந்தியாவுக்கு பெயர் வைக்க வேண்டும் என்பதும் அவர்களின் நோக்கம். இந்தியா கூட்டணியின் காரணமாக இந்த திட்டம் வேகமாக நடந்து வருகிறது. எதிர்க்கட்சிகள் இந்தியா என்று பெயர் வைத்தது அவர்களுக்கு சங்கட்டமாக இருக்கிறது.

ப்ரியன், பத்திரிகையாளர்

வாக்காளர்களிடம் அந்த பெயர் செல்லும் பொழுது தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர்கள் நினைக்கிறார்கள். எனவே அவர்களுக்கு எதிராக பாரத் என்ற விஷயத்தை வேகப்படுத்த வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என உதயநிதி சொல்லியதும் ஒரு காரணம். சனாதன தர்மத்துடன் தொடர்பு கொண்டது தான் பாரதம். ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்த போதே பாரதம் வந்துவிட்டது. ஆர்எஸ்எஸ் ஆரியர்களின் கலாசாரத்தின் அடிப்படையில் இயக்கத்தையே வைத்திருக்கிறார்கள்.

எனவே தான் அந்த பெயரை வைக்க வேண்டும் என நினைக்கிறார்கள். வரக்கூடிய நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் இந்தியா என்ற பெயரை எடுப்பதற்கான முயற்சியில் இறங்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது. யூனியன் ஆப் ஸ்டேட்ஸ் என்பதில் யூனியனை எடுக்க வாய்ப்பிருக்கிறது. அதற்கான மசோதா கொண்டுவருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்தியில் வெளியாகும் அரசாணைகள் பாரத் சர்க்கார் என்று தான் இருக்கிறது. மீண்டும் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா என்பதில் இந்தியா இருக்காது.

மோடி

பாரத் என்று தான் இருக்கும். இதேபோல் அனைத்திலும் மாற்றத்தை கொண்டுவருவார்கள். பின்னர் ஆங்கிலத்தை எடுத்துவிட்டு இந்தியை வைப்பார்கள். பிறகு அந்த இடத்தில சம்ஸ்கிருதத்தை கொண்டுவருவது தான் அவர்களின் திட்டம். சமுதாயத்தில் 4 சாதிகள் பிரிக்கப்பட வேண்டும் என்பதும் நோக்கம். விஷ்வ கர்மா போன்றவற்றுக்கு உதவி செய்வதாக கூறுவது குலக்கல்வி திட்டம். சாதி ரீதியாக மக்கள் பிரித்து இருக்க வேண்டும் என்பதிலும் தெளிவாக இருப்பார்கள். தேர்தல் முடியும் வரை கூட்டணி ஆதாயத்தை தேடுவார்கள். அதிகாரத்தில் முழுமையாக உட்காந்த பிறகு ஜனநாயகம் என்ற போர்வையை பயன்படுத்தி அவர்களின் திட்டத்தை ஒவ்வொன்றாக நிறைவேற்றுவார்கள்” என்று கொதித்தார்.

தி.மு.க செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம்… “இந்தியா என்று சொன்னால் தெம்பாக இருப்பதற்கு பதிலாக அவர்கள் அச்சத்துடன் இருக்கிறார்கள். கேவலமான நிலைக்கு பிரதமர் மோடி சென்றுவிட்டார். இந்தியா என்று சொன்னாலே மிரண்டு போய் இந்தியா என்றே பேசமாட்டார் போலேயே. இதுவரை இந்தியா என்பதை நாம் நிலைநிறுத்தியிருக்கிறோம். அவருடைய பல திட்டங்கள் இந்தியா… இந்தியா என்று தான் இருந்தது.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

தீடீர்னு பாரத் என மாறுகிறார்… என்னவென்று புரியவில்லை. அதையும் முறைப்படி செய்யவில்லை. அவர் நாகரீகமாக நடந்துகொள்ளவில்லை. இதுவரை ‘President of India’ என்பதை தான் நாம் பார்த்திருக்கிறோம். தற்போது ‘President of Bharat’ என போடுகிறார். இது எந்தவிதத்தில் நியாயம் என தெரியவில்லை. இந்தியா கூட்டணி என்று பெயர் வைத்ததால் நான் இந்தியா என்ற அனைத்தையும் மாற்றிவிடுவேன் என்றால் எந்தவிதத்தில் நியாயம்” என்று கடுப்பானார்.

இதுகுறித்து பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதியிடம் விளக்கம் கேட்டோம். “நாங்கள் இந்தியாவிலேயே இல்லை என்று சொன்னவர்கள்… திராவிட நாடு கோரிக்கை இன்னும் இருக்கத்தான் செய்கிறது என்று சொன்னவர்கள்… மாநிலங்களால் ஆனது தான் இந்தியா என்று சொன்னவர்கள்… தற்போது அரசியல் சுய லாபத்திற்காக… மலிவான அரசியலுக்காக தற்போது பேசி வருகிறார்கள்.

நாராயணன் திருப்பதி

கூட்டணி அமைத்துவிட்டு பிறகு பெயரை தேடிக்கொண்டு வந்த அவலநிலை அவர்களுக்கு இருக்கிறது. பாரதம் என்கிற இந்தியா என்பது தான் அதன் பொருள். இதனால் படபடத்து போயிருப்பது ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தான். பாஜக-வுக்கு பயம் இல்லை. பாரதத்துக்கு தான் இந்தியா என்று பெயர். அதை முதலில் அவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்” என்று சூடானார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.