இறக்குமதி செய்யப்படும் இரசாயன உரங்கள் மற்றும் விதைகளின் தரம் மற்றும் விலையை மேற்பார்வை செய்வதற்கு தேசிய கொள்கை

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் இரசாயன உரங்கள் மற்றும் விதைகளின் தரம் மற்றும் விலையை மேற்பார்வை செய்வதற்கு தேசிய கொள்கையொன்று தயாரிக்கப்பட வேண்டும் என்று உணவுப் பாதுகாப்பு மற்றும் கமத்தொழில் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் டீ. வீரசிங்க தெரிவித்தார்.

2003 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட ஆய்வுகளின் தரவுகளின் அடிப்படையில் 70% இரசாயன உரம் மற்றும் 30% சேதனப் பசளை என்ற விகிதத்தில் உரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் ஒரு ஹெக்டயாருக்கு அதிகபட்ச விளைச்சலைப் பெற முடியும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும், உத்தேச தேசியக் கொள்கையில் இந்த விடயங்களை உள்ளடக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் (05) நடைபெற்ற ஊடக சந்திப்பில் உணவுப் பாதுகாப்பு மற்றும் கமத்தொழில் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுத் தலைவர் டீ. வீரசிங்க இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் டீ. வீரசிங்க,

“அரசாங்கங்கள் மாறினாலும், மாற்றமடையாத ஒரே தேசிய கொள்கை அனைத்துத் துறைகளுக்கும் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் விவசாயத் துறைக்காவது, 25 ஆண்டுகளுக்கு மாற்றமடையாத தேசிய கொள்கை ஒன்று அவசியம். விவசாயத் துறையின் தரம் இழக்கப்பட்டால், எதிர்காலத்தில் நாட்டில் விவசாயத்துறை அழியும் நிலை உருவாகும்.

எனவே, இறக்குமதி செய்யப்படும் இரசாயன உரங்கள் மற்றும் விதைகள் தொடர்பிலும் மேலும், அவற்றின் விலைக் கட்டுப்பாடு தொடர்பாகவும் தேசிய கொள்கை ஒன்று அவசியமாகும். அது தொடர்பான அறிக்கையொன்றை அடுத்த துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டத்தில், சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனையைப் பெற்று, விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்ப அறிவை வழங்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றோம். மேலும் உரப் பயன்பாடு குறித்து அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நீண்டகாலமாக இரசாயன உரங்களை பயன்படுத்தியதால், நம் நாட்டின் மண்ணின் தரம் குறைந்துள்ளது. துறைசார் நிபுணர்களின் கலந்துரையாடல்களின் பின்னர், பயிர்களுக்கு 70% இரசாயன உரங்களும், 30% இயற்கை உரங்களும் இடுவது குறித்து பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்நாட்டில் தரமான சேதனப்பசளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் உள்ளன. ஆனால் அண்மைக் காலமாக சேதனப் பசளை தொடர்பான பிரச்சினைகளால் அவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. அதை மீண்டும் சீர்செய்து, சேதனப் பசளை உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கவும், நம் நாட்டின் விவசாயத்தை மேம்படுத்தவும் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதற்காக உயிர் உரங்கள் (Biofertilizer) மற்றும் திரவ உரங்களை உற்பத்தி செய்பவர்களை ஒன்றிணைத்து இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இந்தத் திட்டத்தை ஒரே இரவில் செய்ய முடியாது. குறைந்தபட்சம் ஆறு போகங்களிலேனும் இயற்கை உரங்களை விவசாயிகளுக்கு வழங்கி இத்திட்டம் வெற்றிபெற நடவடிக்கைகளை எடுப்பது அவசியம்.

ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் படி, சுற்றுச்சூழலுக்கு வெளியிடப்படும் நைட்ரஜன் கழிவுகளை 2030 ஆம் ஆண்டுக்குள் 50% சதவீதத்தினால் குறைக்க வேண்டும் என்று ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. எனவே, அந்தத் திட்டத்தை செயற்படுத்தியே ஆக வேண்டும்.

மேலும், 2030ஆம் ஆண்டாகும்போது உலகில் உற்பத்தி செய்யப்படும் பழங்கள் மற்றும் மரக்கறிகளை கொள்வனவு செய்யும்போது, இயற்கை உரமிடப்பட்ட உற்பத்திகளை கொள்வனவு செய்ய வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தற்போது தீர்மானித்துள்ளது. எனவே எதிர்காலத்தில் பழங்கள் மற்றும் மரக்கறிகளை ஏற்றுமதி செய்ய வேண்டுமென்றால், இயற்கை உரங்களைப் பயன்படுத்த முயற்சிக்க வேண்டும்.

அதனால்தான் சேதனப் பசளை மூலம் உற்பத்திச் செயல்முறையைத் தொடர தீர்மானிக்கப் பட்டுள்ளது. 100 % இரசாயன உரங்களைப் பயன்படுத்துவதை விட, நெனோ உரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் 40% சதவீதத்தினால் விளைச்சலை அதிகரிக்க முடியும். மேலும், 70% சேதனப் பசளை மற்றும் 30% இரசாயன உரங்கள் மூலம் இந்த நாட்டின் விளைச்சலை 13% முதல் 25% வரை அதிகரிக்க முடியும்.” என்று உணவுப் பாதுகாப்பு மற்றும் கமத்தொழில் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுத் தலைவர் டீ. வீரசிங்க தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.