கோவை:
அமைச்சர் உதயநிதியின் தலையை வெட்டி வருவதற்கு உத்தரபிரதேச சாமியார் உத்தரவிட்டிருக்கும் நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கோவை முழுவதும் திமுகவினர் வெறித்தனமான போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
சனாதனத்தை டெங்கு, மலேரியாவோடு ஒப்பிட்டு அதனை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது இந்தியா முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது.
சனாதனம் என்பதற்கு இந்து மதம் என்ற ஒரு அர்த்தமும் இருப்பதால், இந்து மதத்தினரை அழிக்க வேண்டும் என உதயநிதி பேசியதாக பாஜகவினர் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இதனால் வட மாநிலங்களில் உதயநிதிக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதன் உச்சக்கட்டமாக, உபியைச் சேர்ந்த அஹோரி சாமியாரான பரமஹம்ச ஆச்சார்யா, உதயநிதியின் தலையை வெட்டிக் கொண்டு வருபவர்களுக்கு 10 கோடி ரூபாய் சன்மானம் தருவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த அறிவிப்பு பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், இதனை அசால்ட்டாக டீல் செய்தார் உதயநிதி. “என் தலை மேலே உனக்கு என்னய்யா அவ்வளவு ஆசை. என் தலைய சீவ 10 கோடி எதுக்கு.. 10 ரூபா சீப்பு கொடுத்தா நானே சீவிக்குவேன். தண்டவாளத்திலேயே தலையை வைக்கிறவங்க நாங்க. இந்த மிரட்டலுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன்” எனக் கூறினார்.
இதனிடையே, உதயநிதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோவை முழுவதும் நேற்று பாஜகவினர் போஸ்டர் ஒட்டினர். அதில், “சனாதனம் எங்கள் மூச்சு” என எழுதப்பட்டிருந்தது. இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுகவினர் இன்று கோவையில் அதிரடி போஸ்டரை ஒட்டி இருக்கின்றனர். அதில், “போலி சாமியாரே.. 10 கோடி என்ன 100 கோடி தர்றோம். அண்ணன தொடுடா பார்க்கலாம்” என எழுதப்பட்டு ஸ்டாலின், உதயநிதி, கருணாநிதி, செந்தில் பாலாஜி உள்ளிட்டோரின் புகைப்படங்களும் அச்சிடப்பட்டுள்ளன.