பாரத் என பெயர் மாற்றுவதன் மூலம் இந்தியர்களின் மனதை புண்படுத்தக்கூடாது: திமுக எம்.பி. கனிமொழி

சென்னை: “எல்லா திட்டங்களுக்கும் புரியாத பெயர்களை வைக்கும் ஒன்றிய அரசுக்கு, பாரத் என பெயர் மாற்றுவது சாதாரண ஒன்றாக தோன்றலாம். இப்படி பெயர் மாற்றுவதன் மூலம் இந்தியர்களின் மனதை புண்படுத்தக்கூடாது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்று திமுக எம்பி, கனிமொழி கூறியுள்ளார்.

சென்னையில் திமுக எம்பி, கனிமொழி இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றும் திட்டம் குறித்து கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “அரசியலமைப்புச் சட்டத்தில் அவ்வாறு இருப்பதாகக் கூறுவார்கள். இந்த இரண்டு வார்த்தைகளுமே அதில் உள்ளன. மேடைகளில் பேசுகிறவர்கள்கூட இந்த இரண்டு பெயர்களையும் பயன்படுத்துகிற சூழல்தான் இருந்து வருகிறது.

ஆனால், எப்போதுமே பாரதப் பிரதமர் என்பதைவிட, Prime Minister of India என்றுதான் அழைப்பிதழ்கள் கொடுக்கப்படும். அதேபோல, President of India தான். திடீரென்று, தேவையில்லாமல் புதிதாக ஒரு சர்ச்சையை ஏற்படுத்துகிற வகையில், பாரத குடியரசுத் தலைவர் என்பதும், இந்தியாவின் பெயரை பாரதம் என்று மாற்றப்போகிறோம் என்று கூறுவதற்குப் பின்னால் ஒரு அரசியல் இருக்கிறது. அதை நாம் எதிர்க்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்படுகிறோம்.

இண்டியா என்ற பெயரில், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு தளத்தில் ஒரு கூட்டணியை உருவாக்கியிருக்கும் போது, அந்தப் பெயரே ஒன்றிய அரசுக்கு அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய சூழலில்தான் பெயரையே மாற்றியுள்ளனர். வரலாற்றை மாற்றுவது, பெயர்களை மாற்றுவது எனத்தொடங்கி, சட்டங்களுக்குக்கூட இந்தியில் பெயர் வைக்க ஆரம்பித்துவிட்டனர். எல்லா திட்டங்களுக்கும் புரியாத பெயர்களை வைக்கும் அவர்களுக்கு இதுபோல மாற்றுவது சாதாரண ஒன்றாக தோன்றலாம். எத்தனையோ விசயங்களில் மனதை புண்படுத்திவிட்டதாக கூறும் அவர்கள், இப்படி பெயர் மாற்றுவதன் மூலம் இந்தியர்களின் மனதை புண்படுத்தக்கூடாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்” என்று அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.