கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வெள்ளாலூர் குப்பைக் கிடங்கிலிருந்து பெறப்படும் பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து, சமையல் எரிபொருள் தயாரிக்கலாம். ஒருமுறை பயன்படுத்திவிட்டு குப்பையில் வீசக்கூடிய பிளாஸ்டிக் கழிவுகளை, ரிவர்ஸ் இன்ஜினீயரிங் தொழில்நுட்பம் (Reverse engineering) மூலமாக, நான்கு அல்லது அதற்கும் குறைவான கார்பன் அணுக்களைக்கொண்ட எரிபொருளை உருவாக்கலாம். இதைச் சமையல் எரிவாயுவாகவும், தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தலாம்.
கச்சா எண்ணெய் என்பது ஹைட்ரோ-கார்பனின் கலவையே. இந்தக் கலவையிலிருந்துதான் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பல எரிபொருள்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. இவற்றை பாலிமர் கலவை என்று அழைக்கலாம். அந்த வகையில் பிளாஸ்டிக்கும் பாலிமர் கலவைகளில் ஒன்றே. பிளாஸ்டிக்கை பைராலிசிஸ் (Pyrolysis) செயல்முறைக்கு உட்படுத்தி, எரிபொருளாக மாற்றலாம். இதன் செயல்முறை எளிதானதே.
குப்பைகளிலிருந்து அடர்த்தி குறைவானவை (உதாரணம்: சாக்லேட் பேப்பர்ஸ், பாலிதீன் பேக்குகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்டவை) மற்றும் அடர்த்தி அதிகமானவை (உதாரணத்துக்கு ஸ்கேல், கன்டெய்னர், லஞ்ச் பாக்ஸ், சேர் போன்றவை ) என இரண்டு வகையில் பிளாஸ்டிக் கழிவைப் பிரித்து, வகைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
இதில் அடர்த்தி குறைவான பிளாஸ்டிக்கைத் தனியாக எடுத்துக்கொண்டு, அதை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் அவற்றை இயந்திரங்களில் செலுத்தி சிறு சிறு துகள்களாகக் கத்தரித்து, தொடர்ந்து அவற்றை 450 டிகரி செல்சியஸ் வெப்பநிலைக்கு உட்படுத்தி, உருகவைக்க வேண்டும். இப்போது அதிலிலுள்ள பாலிமர் இணைப்புகள் (Polymer Chain) உடைந்து, மீத்தேன் (Methane), ஈத்தேன் (Ethane), புரோபேன் (Propane), பியூட்டேன் (Butane) உள்ளிட்ட வாயுக்கள் வெளியாகும். அந்த வாயுக்களைத் தேவையான அளவில் குளிரூட்டல் முறைக்கு உட்படுத்தி, திரவமாக மாற்றி எரிபொருளாகச் சேமித்துக்கொள்ளலாம். பின்னர், தேவைக்கேற்றவாறு வெவ்வேறு வகைகளில் அவற்றை எரிபொருள்களாகப் பயன்படுத்தலாம் என்பதால், கோவை மாவட்டத்தில் இதற்கான ஒரு தொழிற்சாலையை உருவாக்கலாம்.
கோவை மாவட்டத்தில் வெள்ளாலூர் குப்பைக் கிடங்கில் நாளொன்றுக்குச் சுமார் 2,000 டன் குப்பைகள் கொட்டப்படுகின்றன. குறைந்த அளவே இங்குள்ள மக்கும் குப்பைகளை பயோ மைனிங் (Bio mining) செய்து உரமாக மாற்றுகிறார்கள். இங்கிருந்து பிளாஸ்டிக் குப்பைகளைப் பெற்று எரிபொருளை உருவாக்கலாம். பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யாமல், அப்படியே நிலத்திலோ, நீர்நிலைகளிலோ கொட்டுவதால் சுற்றுச்சூழல் கடும் பாதிப்புக்கு உள்ளாகிறது. இதைத் தடுக்கும் வகையில் அடர்த்தி குறைவான பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்டுத்தி, எரிபொருள் தயாரிப்பதால் சுற்றுச்சூழலுக்கு நன்மை விளைவிப்பதோடு, அதிலிருந்து ஆண்டொன்றுக்குப் பல கோடி ரூபாய் அளவுக்கு வருமானத்தையும் பெறலாம்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வெள்ளாலூர் குப்பைக் கிடங்கிலிருந்து பிரித்தெடுக்கப்படும் அடர்த்தி அதிகமான பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி அலங்கார பிளாஸ்டிக் டைல்ஸ் மற்றும் டைல்ஸ் ஷீட் (Plastic tiles and tile sheet) தயாரிக்கலாம்.
இதை உருவாக்கும் முறையும் எளிதானதுதான். அடர்த்தி அதிகமான பிளாஸ்டிக் கழிவினைச் சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். பிறகு அதிலிருக்கும் அதிக அடர்த்தி கொண்ட பல்வேறு வகையிலான கழிவுப் பொருள்களைத் தரம் பிரிக்க வேண்டும். உதாரணத்துக்கு, பிளாஸ்டிக் மூடிகள் பாலி-புரோபீன் (Polypropene) வகையைச் சேர்ந்தவை. பிளாஸ்டிக் நாற்காலிகள் ஹைடென்சிட்டி பாலி-எத்திலீன் (High Density Polyethylene) வகையைச் சேர்ந்தவை.
இவற்றை அந்தந்த வகைகளுக்கு ஏற்ற வெப்பநிலையில் சூடேற்றி, கூழாக்கிக்கொள்ள வேண்டும். பிறகு அந்தக் கூழை, டைல்ஸ் அச்சுகளில் வார்த்தெடுக்க வேண்டும். பின்னர் அதன் மேற்பரப்பை மிருதுவாகவும் (Smoothening) பளபளப்பாகவும் மாற்றுவதன் மூலமாக அலங்கார டைல்ஸ்களையும், டைல்ஸ் ஷீட்டுகளையும் உருவாக்கலாம்.
குப்பைகளிலிருந்து பெறப்படும் பிளாஸ்டிக் கழிவுகளைப்போலவே, கண்ணாடி பாட்டில்கள் மற்றும் அதன் துண்டுகளையும் சேகரித்து, அவற்றையும் இந்த டைல்ஸ் தயாரிப்பில் பயன்படுத்திக்கொள்ளலாம். கண்ணாடிகளைச் சிறு சிறு துகள்காக மாற்றி, அவற்றைக் கழிவுகளிலிருந்து பெறப்பட்ட பிளாஸ்டிக் கூழினை அச்சுகளில் வார்ப்பதற்கு முன்பாக, அடியில் பரப்பி, பின்னர் அதன்மீது பிளாஸ்டிக் கூழினை ஊற்றி செட் செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்வதன் வழியே, பளபளப்பான புதிய வகை பிளாஸ்டிக் அலங்கார டைல்ஸ்களைத் தயாரிக்கலாம் என்பதால், இதற்கான தொழிற்சாலையை கோவையிலுள்ள வெள்ளாலூர் குப்பைக் கிடங்குக்கு அருகிலேயே அமைக்கலாம். அங்கு தயாரிக்கப்படும் பல்வேறு வகையிலான அலங்கார டைல்ஸ்களுக்குக் குறிப்பிட்ட விலைகளை நிர்ணயம் செய்து, சந்தையில் விற்பனை செய்வதன் வழியே ஆண்டொன்றுக்குப் பல கோடி ரூபாய் அளவுக்கு வருமான வாய்ப்பைப் பெறுவதோடு, கோயம்புத்தூர் மாவட்ட மக்களின் பொருளாதாரத்தையும் உயர்த்தலாம்.
(இன்னும் காண்போம்…)