தனித்து விடப்பட்டாரா டிடிவி தினகரன்? அதிமுக வாக்கு வங்கியில் ஓட்டை போட பக்கா பிளான்!

மக்களவைத் தேர்தலில் பாஜக அல்லது காங்கிரஸ் என ஏதாவது ஒரு தேசிய கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவோம் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியிருந்தார்.

தேர்தல் சமயத்தில் டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை கூட்டணியில் இணைத்துக் கொள்ள பாஜக எடப்பாடி பழனிசாமியை வலியுறுத்தும். அதிமுக அங்கம் வகிக்கும் கூட்டணியில் அமமுக, ஓபிஎஸ் ஆகியோர் இணைந்தால் அது அதிமுகவுக்கு பழைய வலிமையை தரும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறினர்.

ஆனால் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியோ, டிடிவி தினகரனையும், ஓபிஎஸ்ஸையும் தன் பக்கம் சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்று உறுதியாக கூறிவிட்டார். பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே ஏற்கனவே சிறு சிறு முரண்கள் எழுவதும், அடங்குவதுமாக இருக்கும் நிலையில் தினகரனுக்கு ஆதரவாகவோ, ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாகவோ பேசும் நிலையில் பாஜக இல்லை என்கிறார்கள்.

இந்த சூழலில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தஞ்சாவூரில் அளித்த பேட்டியில், மக்களவைத் தேர்தலில் அமமுக தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதுதான் எனது விருப்பம் என்று இதற்கு முன் அவர் பேசியதையே மாற்றி பேசினார். அத்துடன் அதிமுகவுடனான கூட்டணி குறித்து பேசிய அவர், “எடப்பாடி பழனிச்சாமி உள்ள கூட்டணியில் இடம் பெற வேண்டுமா என என்னிடம் எங்களது நிர்வாகிகள், தொண்டர்கள் கேட்கின்றனர். அதனால் தனித்து நிற்பது சாலச்சிறந்தது என்ற முடிவை எடுக்கலாம்” என்று கூறியுள்ளார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமில்லை – சண்முகசுந்தரம்

அதிமுக – பாஜக கூட்டணியில் தாங்கள் இல்லை என்றான பின்னர் பாஜகவுக்கு எதிரான விமர்சனங்களையும் வைக்கத் தொடங்கியுள்ள்ளார், “ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் சாத்தியமில்லை. செலவைக் குறைப்பதற்காக ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்த வேண்டும் எனக் கூறினாலும், ஏற்கனவே தேர்தல் நடைபெற்ற மாநிலங்களில் செலவு அதிகமாகும். எனவே மத்திய அரசு தங்களுக்கு அறுதி பெரும்பான்மை இருப்பதால் எதையும் செய்யக்கூடாது. மக்களிடம் கருத்து கேட்ட பிறகு செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

ஓபிஎஸ் அணியின் பன்ருட்டி ராமச்சந்திரன் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நாற்பது தொகுதிகளிலும் தனித்து போட்டியிட உள்ளதாக தெரிவித்திருந்தார்.

“டிடிவி தினகரன், பன்ருட்டி ராமச்சந்திரன் ஆகிய இருவரது கருத்துக்களைப் பார்க்கும் போது அதிமுக, பாஜக, திமுக ஆகிய கட்சிகளை எதிர்த்து தனித்து களம் காணத் தொடங்கிவிட்டனர். தேர்தல் சமயத்தில் இவர்கள் இருவரும் இணைந்து போட்டியிட்டு அதிமுகவின் வாக்கு வங்கியில் ஓட்டை போடும் வேலையைச் செய்வார்கள். அது திமுகவுக்கு சாதகமாக அமையும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.