வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருப்பதி: ”ஒரு கோடி முறை கோவிந்த நாமம் எழுதுவோர் குடும்பத்துடன் வி.ஐ.பி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடும், 10,01,116 முறை எழுதி வரும் ஒருவருக்கு விஐபி தரிசன ஏற்பாடும் தேவஸ்தானம் தரப்பில் செய்யப்படும்” என திருப்பதி தேவஸ்தான அறிவித்துள்ளது.
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் மேற்கொள்கின்றனர். பிரபலமானவர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என ஒரு சிலருக்கு வி.ஐ.பி எனப்படும் சிறப்பு தரிசனம் மேற்கொள்ள தேவஸ்தானம் அனுமதி வழங்குகிறது.
இந்த நிலையில், தேவஸ்தான அறங்காவலர் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நேற்று (செப்.,5) நடந்தது. அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் நிர்வாக அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஆலோசனைக்கு பின்னர் கருணாகர் ரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஹிந்து கலாசார மரபுகளை உலகமயமாக்கல் திட்டத்தின் கீழ், ராமகோடி (ராம் ராம் என கோடி முறை எழுதுவது) எழுதுவதைப் போல் கோவிந்த கோடி எழுதுவது ஊக்குவிக்கப்படும். 25 வயதுக்கு குறைவான இளைஞர்கள் ஒரு கோடி முறை ‘கோவிந்தா கோவிந்தா’ என கோவிந்த நாமத்தை எழுதினால் அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் விஐபி தரிசன வசதி ஏற்படுத்தி தரப்படும்.
10,01,116 முறை எழுதி வருபவர்களுக்கு (ஒருவருக்கு) விஐபி தரிசனம் பெற ஏற்பாடு செய்யப்படும். பாரம்பரிய வழக்கங்களை இளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
ஆந்திர மாநிலத்தில் எல்.கே.ஜி. முதல் பிஜி வரை படிக்கும் மாணவர்களுக்கு நீதிபோதிக்கும் நோக்கத்தில் பகவத் கீதையில் உள்ள மனித நேயத்தை வளர்க்கும் கருத்து கொண்ட 20 பக்க புத்தகம், ‘புத்தகப் பிரசாதமாக’ விநியோகிக்கப்படும். மொத்தம் 1 கோடி புத்தகங்கள் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement