லோக் சபா தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு கூட இல்லாத நிலையில், இந்த நாடு இந்தியாவா அல்லது பாரதமா என்ற விவாதம் இரண்டு நாள்களாகப் பேசுபொருளாக இருக்கிறது. இந்த விவகாரத்தில் அரசியலமைப்புச் சட்டமே, இந்தியாவை பாரதம் என்று கூறுகிறது என பா.ஜ.க-வினர் கூறிவர எதிர்க்கட்சிகள் இதனை, பா.ஜ.க-வின் எதேச்சதிகார போக்கு என சாடிவருகின்றன. இந்த நிலையில் நம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நாட்டுக்கு என்ன பெயர் வேண்டுமானாலும் வைக்கட்டும், என் நாடு தமிழ்நாடு என்றும், பெயரை மாற்றுவதால் நாட்டின் மீதான 150 லட்சம் கோடி கடன் தள்ளுபடியாகிவிடுமா என்று கேள்வியெழுப்பியிருக்கிறார்.
இந்த விவகாரம் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “எதைத்தான் அவர்கள் முன்னறிவிப்பு செய்து முறைப்படி செய்திருக்கிறார்கள். கச்சத்தீவை எடுத்துக் கொடுத்த போது இந்திரா காந்தி யாரிடமாவது கேட்டார்களா… பொது விவாதம் நடந்ததா… அதுபோல தான் இதுவும். எல்லாமே தான்தோன்றித்தனம். நீங்கள் என்ன செய்து விடுவீர்கள், உங்களால் என்ன செய்ய முடியும் என்ற திமிர்தனம் தான் இது. எங்களுக்கு எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை. நீங்கள் பாரத் என்று வையுங்கள் இல்லை, சூரத் என்று வையுங்கள். உங்கள் நாட்டுக்கு நீங்கள் பெயர் வைக்கிறீர்கள். நான் அதில் தலையிட முடியாது. ஆனால், இது என் நாடு, தமிழ்நாடு.
இந்தியா, வெள்ளைக்காரன் வைத்த பெயர் என்று பாரத் என்று வைக்கிறீர்கள். ஆனால் நாடே அவர்கள் உருவாக்கி வைத்தது தானே. வில்லியம் ஜோன்ஸ் கையெழுத்து போட்டதில் தானே நீங்கள் இந்து, அப்படியென்றால் அந்த பெயரையும் மாற்றிவிடுங்கள். பாரத் என்று பெயர் வையுங்கள், இதையும் நீக்கிவிட்டு வேறு பெயர் வையுங்கள். பெயர் மாற்றிவிட்டால் நாட்டின் 150 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்து விடுவார்களா… எல்லோருக்கும் கல்வி, எல்லோருக்கும் வேலைவாய்ப்பு, பசி இல்லாத பாரதம் உருவாகிவிடுமா… ஆட்சிக்கு வந்தபோதே பாரத் என்று மாற்றியிருக்கலாமே…
நான்கு மாதத்தில் தேர்தல் இருப்பதால் சிலிண்டர் விலை குறைகிறது, சட்ட விதிகளின் பெயர்கள் மாற்றப்படுகிறது, சந்திரயான் நிலவில் தரையிறங்குகிறது, சூரியனுக்கு ஆதித்யா செல்கிறது, ஆனால் இங்கு அடிவயிறு பசிக்கிறது. அதிகாரத் திமிரில் ஆடுகிறார்கள். அவர்களின் கோட்பாடு இந்து, இந்தியா, இந்தி. இப்போது அவர்கள் மகாபாரதத்திலிருந்து பாரதம் என்பதை எடுத்து `பாரத் மாதா கி ஜே’ என்று போடுவதற்கு வசதியாக இருக்கும் என்று பாரத் என்று மாற்றுகிறார்கள். அம்பேத்கரின் அரசியல் சாசனத்தை ஏற்கிறீர்கள் என்றால், `இந்த நிலப்பரப்பு முழுவதும் தமிழை தாய் மொழியாகக் கொண்டவர்கள் தான் வாழ்ந்தார்கள்’ என்று அவர் கூறியதை ஏற்கிறீர்களா, எதிர்க்கிறீர்களா.
நீங்கள் இந்துவாகவோ, இஸ்லாமியராகவோ, கிறிஸ்தவராகவோ இருங்கள் நாங்கள் தமிழர்கள். இது என் நாடு, தமிழ்நாடு. மாநில உரிமைகள் பேசியவர்கள் சரணடைந்து விட்டார்கள். இவர்களே, `ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ என்பதை ஆதரிக்கிறார்கள். ஒரே நாடு ஒரே தேர்தலை 1971-ல் கருணாநிதி ஆதரித்துப் பேசியதும் இருக்கிறது. ஆனால் இன்றைக்கு எதிர்க்கிறார்கள். எனவே, இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், முதலில் இந்தியா ஒரே நாடா என்பதைப் பேசி முடிவு செய்துவிட்டு அடுத்த கட்டத்துக்குச் செல்வோம்” என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY