"ஒரே ஒரு பிஸ்கட்டுக்கு 1 லட்சமா?".. களத்தில் இறங்கி கஸ்டமர்.. அலறவிட்ட நீதிமன்றம்!

சென்னை:
ஒரே ஒரு பிஸ்கட்டுக்காக ரூ.1 லட்சத்தை செலுத்தக் கூறி நுகர்வோர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இன்றைய காலக்கட்டத்தில் நுகர்வோருக்காக பல உரிமைகளை சட்டம் உறுதி செய்திருக்கிறது. எம்ஆர்பி விலையை விட கூடுதலாக விற்கக் கூடாது; தரமற்ற உணவுப்பொருட்களை விற்கக் கூடாது என ஏராளமான கட்டுப்பாடுகளை மக்களின் நலனுக்காக அரசு கொண்டு வந்துள்ளது. அப்படி ஏதாவது விதிமீறல்கள் நடந்தால் நுகர்வோர் நீதிமன்றத்தை மக்கள் நாட முடியும். இதில் நுகர்வோருக்கு சாதகமாக பல தீர்ப்புகள் வந்திருக்கின்றன.

ஒருகாலத்தில் இதுதொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு இல்லாத போதிலும், தற்போது பெரும்பாலோருக்கு நுகர்வோர் உரிமைகள் தெரிந்திருக்கின்றன. அந்த வகையில், ஒரு வாடிக்கையாளர் தொடுத்த வழக்கில் பிஸ்கட் நிறுவனத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

சென்னையை சேர்ந்தவர் டில்லி பாபு. இவர் கொரோனா ஊரடங்கு சமயத்தில் உணவின்றி தவித்த தெரு நாய்களுக்கு பிஸ்கட் அளித்து வந்துள்ளார். அந்த வகையில், கடந்த 2021-ம் ஆண்டு அருகில் இருந்த கடைக்கு சென்று ஐடிசி நிறுவனத்தின் ‘சன் ஃபீஸ்ட் மாரி லைட்’ பிஸ்கட் பாக்கெட்டை வாங்கியுள்ளார்.

பின்னர் அந்த பாக்கெட்டில் இருந்த பிஸ்கட்டுகளை நாய்களுக்கு போடும் போது, அதில் வெறும் 15 பிஸ்கட்டுகளே இருந்திருக்கின்றன. ஆனால், ஒரு பாக்கெட்டில் 16 பிஸ்கட்டுகள் இருக்க வேண்டும். இதுதொடர்பாக அந்தக் கடைக்காரரிடமும், பின்னர் ஐடிசி நிறுவனத்திடமும் விளக்கம் கேட்டுள்ளார் டில்லி பாபு.

ஆனால் அவர்கள் தரப்பில் இருந்து உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக நுகர்வோர் நீதிமன்றத்தில் டில்லி பாபு வழக்கு தொடர்ந்துள்ளது. அதில், “நாளொன்றுக்கு ஐடிசி நிறுவனம் 50 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகளை தயாரிக்கிறது. இதில் ஒரு பிஸ்கட்டின் விலை 75 பைசா. அப்படியென்றால், ஒவ்வொரு பாக்கெட்டிலும் ஒரு பிஸ்கட்டை குறைப்பதால் ஒரு நாளைக்கு மட்டும் ரூ.29 லட்சத்தை பொதுமக்களிடம் இருந்து ஐடிசி நிறுவனம் ஏமாற்றுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, மனுதாரரின் புகாரில் உண்மை இருப்பதை சுட்டிக்காட்டிய நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி, மனுதாரருக்கு ஐடிசி நிறுவனம் ரூ.1 லட்சத்தை இழப்பீடாக தர வேண்டும் என உத்தரவிட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.