சென்னை: தமிழகத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழகம், கல்வியியல் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் ஆகிய 3 பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை தேர்வு செய்வதற்கு குழு அமைத்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். அந்தக் குழுவில், முதன்முறையாக யுஜிசி பிரதிநிதி இடம்பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது.
தமிழகத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழகம், கல்வியியல் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் ஆகிய 3 பல்கலைக்கழகங்களில் தற்போது துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பல்கலைக்கழகங்களின் துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுவில், பல்கலைக்கழக செனட் உறுப்பினர்கள், தமிழக அரசின் பிரதிநிதி ஒருவர் மற்றும் ஆளுநர் தரப்பில் ஒருவர் இடம்பெறுவர். இக்குழு விண்ணப்பங்களை பரிசீலித்து, தகுதியான 3 பேரின் பெயர்களை ஆளுநருக்கு பரிந்துரைக்கும். அதில் ஒருவரை ஆளுநர் நியமிப்பது வழக்கம்.
இந்தச் சூழலில், துணைவேந்தர் தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) பிரதிநிதி ஒருவரை சேர்க்க வேண்டும் என்று ஆளுநர் நிபந்தனை விதித்துள்ளதாக, சமீபத்தில் உயர் கல்வி அமைச்சர் க.பொன்முடி தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது ஆளுநர் விதித்த நிபந்தனை தொடர்பாக, தமிழக உயர் கல்வித் துறை சார்பில் விளக்கக் கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
அக்கடிதத்தில் ‘துணைவேந்தர் நியமனத்தில், யுஜிசியின் விதிகளை பின்பற்ற வேண்டும் என்பது கட்டாயம். தேடுதல் குழுவில் யுஜிசியின் பிரதிநிதி ஒருவர் சேர்க்கப்பட வேண்டும் என்பது கட்டாயமில்லை’ என்று தெரிவித்துள்ளதுடன், பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடர்பான யுஜிசியின் விதிமுறைகளையும் குறிப்பிட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது.
தமிழகத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழகம், கல்வியியல் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் ஆகிய 3 பல்கலைக்கழகங்களுக்கும் துணை வேந்தர்களை தேர்வு செய்வதற்கு 4 பேர் அடங்கிய தனித்தனிக் குழுக்களை அமைத்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.
சென்னைப் பல்கலைக்கழம்: தமிழக ஆளுநரின் பிரதிநியாக, கர்நாடக மத்தியப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் பட்டு சத்யநாராயணாவும், தமிழக அரசின் பிரதிநிதியாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும், மாநில திட்டக் குழுவின் உறுபினருமான கே.தீனபந்துவும், பல்கலைக்கழக செனட் பிரதிநிதியாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பி.ஜெகதீசனும், யுஜிசி பிரதிநிதியாக, தெற்கு பிஹார் மத்தியப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ஹெச்சிஎஸ் ரத்தோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கல்வியியல் பல்கலைக்கழகம்: தமிழக ஆளுநரின் பிரதிநியாக, யுஜிசி உறுப்பினர் பேராசிரியர் சுஷ்மா யாதாவாவும், தமிழக அரசின் பிரதிநிதியாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.அலாவுதீனும், பல்கலைக்கழக செனட் பிரதிநிதியாக தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டி.பத்மநாபனும், யுஜிசி பிரதிநிதியாக, தெற்கு பிஹார் மத்தியப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ஹெச்சிஎஸ் ரத்தோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகம்: தமிழக அரசின் பிரதிநிதியாக, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பிடபிள்யூசி.டாவிதாரும், பல்கலைக்கழக சிண்டிகேட் பிரதிநிதியாக சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பி.துரைசாமியும், பல்கலைக்கழக செனட் பிரதிநியாக பாரதியார் பல்கலை. மற்றும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஜி.திருவாசகமும், யுஜிசி பிரதிநிதியாக, பெங்களூரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பி.திம்மேகவுடாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் குழுவில் உள்ள உறுப்பினர்கள், சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களுக்காக துணைவேந்தர் பணியிடங்களுக்கு மூவரது பெயரை பரிந்துரைக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.