"உதயநிதி தலையை வெட்டிருவியா நீ".. உ.பி. சாமியாரை அலறவிட்ட சீமான்.. "இவ்ளோ பாசமா அண்ணனுக்கு"

சென்னை:
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தலையை வெட்டி வருமாறு கூறிய உத்தரபிரதேச சாமியாரை விளாசி தள்ளியுள்ளார் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

சனாதனத்தை டெங்கு, மலேரியாவோடு ஒப்பிட்டு அதனை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது இந்தியா முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது. சனாதனம் என்பதற்கு இந்து மதம் என்ற ஒரு அர்த்தமும் இருப்பதால், இந்து மதத்தினரை அழிக்க வேண்டும் என உதயநிதி பேசியதாக பாஜகவினர் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இதனால் வட மாநிலங்களில் உதயநிதிக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதன் உச்சக்கட்டமாக, உபியைச் சேர்ந்த அஹோரி சாமியாரான பரமஹம்ச ஆச்சார்யா, உதயநிதியின் தலையை வெட்டிக் கொண்டு வருபவர்களுக்கு 10 கோடி ரூபாய் சன்மானம் தருவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சீமானிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “உதயநிதி தலையை வெட்ட 10 கோடி கொடுக்கிறானா.. நான் சொல்றேன். அந்த சாமியார் தலையை வெட்ட நான் 100 கோடி ரூபாய் தர்றேன். அவன் தலையை வெட்டிக் கொண்டு வாங்க. ஒரு சாமியார் என்பவன் யார்? எல்லாவற்றையும் விட்டுவிட்டு பற்றற்றவனாக இருப்பவேன சாமியார்.

சாந்தமே உருவானவனை தானே சாமியார் என்று அழைக்கிறோம். நீ என்னடானா அவன் தலையை வெட்டிட்டு வா.. நாக்கை அறுத்துட்டு வானு சொல்லிட்டு திரியுற. நீ கசாப்பு காரன்டா. நீ சாமியார் இல்லடா ரவுடிப்பய. தம்பி உதயநிதி ஒரு கருத்தை சொல்றார்னா, நீ உன் கருத்தை சொல்லுடா. அதுதானே ஜனநாயகம். அதை விட்டுட்டு தலையை எடு, வாலை எடுனு சொல்லிட்டு இருக்க” என சீமான் கூறினார்.

இதனிடையே, கடந்த சில தினங்களாக திமுகவுக்கு ஆதரவாக சீமான் பேசி வருவதாக பாஜகவினர் கூறியுள்ளனர். இதுகுறித்து நேற்று அண்ணாமலை கூறுகையில், “சீமான் அண்ணனை மிகப்பெரிய தைரியசாலினு நான் நினைச்சேன். ஆனால், ஒரே ஒரு கேஸுக்கு சீமான் இவ்வளவு பயப்படுவார்னு நான் நினைச்சி கூட பார்க்கல. திமுகவை இப்படி ஆதரிக்கிறதுக்கு பேசாம, திமுகவோட பி டீம் தான் நாங்கனு சொல்லிட்டு போய்டலாமே” என அண்ணாமலை விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.