மட்டக்களப்பு மாவட்டத்தில் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை தொடர்பான ஊக்குவிப்பு நிகழ்ச்சித் திட்டம்

சிவில் விமானப் போக்குவரத்துத் துறையை மாணவர்கள் மத்தியில் ஊக்குவிப்பதற்காக தெளிவூட்டும் நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று (5) மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கு இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் செப்டம்பர் 19ஆம் திகதி நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளமை தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.

இக்கலந்துரையாடலில் ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர் இளங்கோவன், சிவில் விமானப் போக்குவரத்து சேவைகள் ஊக்குவிப்புப் பிரிவின் தலைவர் பிரபாத் குலரத்ண மற்றும் ”குவன்சர” சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் நிலந்த தென்னகோன் ஆகியோர் சிவில் விமான சேவை துறை தொடர்பாகத் தெளிபடுத்தினார்கள்.

எதிர்காலத்தில் உலகில் சிவில் விமான சேவைகள் போக்குவரத்திற்காக ஆறு இலட்சம் விமானிகள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்தவர்கள் அதிகம் தேவைப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இத்துறையில் சகல தொழிற்துறைகளிலுள்ள தொழில்வாய்ப்புக்களும் விமானப் போக்குவரத்துத் துறையுடன் தொடர்பு பட்டதான சந்தர்ப்பங்கள் ஆர்வமுள்ளவர்களுக்கு காத்திருக்கின்றது.

விமானி, பொறியியலாளர் மாத்திரமன்றி சிவில் விமானப் போக்குவரத்துத் துறை சட்டத்தரணிகள், வைத்தியர்கள், விமானப் பயண வழிநடத்துனர்கள், உணவு தயாரிப்பாளர்கள், என நூற்றுக்கும் அதிகமான பிரிவுகளில் தொழில் வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

அதற்கிணங்க, ஆர்வமுள்ளவர்களை நாட்டிலேயே உருவாக்கும் நோக்கில் இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையினால் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகின்றது.

அதனால், பாடசாலை மாணவர்களின் எதிர்கால இலட்சியங்களுக்குக் கனவுகளை ஏற்படுத்தவுள்ள புதிய தொழிற்துறையாக சிவில் விமானப் போக்குவரத்துத் துறை மற்றும் அதிலுள்ள பல்வேறு தொழில்வாய்ப்புக்கள் தொடர்பாக அறிவூட்டல் நிகழ்ச்சியாக இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இதுவரை இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை 68 ஊக்குவிப்பு நிகழ்ச்சி நடாத்தி 593 “சிவில் விமானப் போக்குவரத்து பாடசாலைக் கழகங்கள்” நாடளாவிய ரீதியில் உருவாக்கப்பட்டுள்ளன.

இதன்போது இத்தெளிவுபடுத்தல் நிகழ்ச்சியில் மாணவர்களை பங்குபற்றச் செய்வதனால் மாதிரி விமானங்களைத் தயாரித்தல், புதிய தொழில்நுட்பங்களைத் உருவாக்குதல், மற்றும் விமானநிலையங்களுக்குச் செல்லும் போது அங்கு நடந்துகொள்ளும் நடைமுறைகள் போன்ற பல்வேறு செயற்பாடுகளில் மாணவர்கள் உள்ளீர்க்கப்படுவார்கள் என இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 400 பாடசாலை மாணவர்களுக்கு இதற்கான வாய்ப்புக்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் உட்பட வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பாடசாலை அதிபர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.