ஒரே நாடு, ஒரே தேர்தல் விவகாரம் தலைமை தேர்தல் கமிஷனர் பதில்| Chief Election Commissioners response to one country, one election issue

போபால்,
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ நடைமுறை குறித்த கேள்விக்கு பதிலளித்த, இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார், ”அரசியலமைப்பு விதிகள் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி செயல்பட தேர்தல் கமிஷன் தயாராக உள்ளது,” என்றார்.

லோக்சபா, மாநில சட்டசபைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள மத்திய பிரதேசத்திற்கு, தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் தலைமையிலான அதிகாரிகள் நேற்று சென்றனர்.

போபாலில், செய்தியாளர்களிடம் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் கூறியதாவது:

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ விவகாரத்தில், அரசியலமைப்பு விதிகள் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி செயல்பட, தேர்தல் கமிஷன் தயாராக உள்ளது. 

லோக்சபாவின் பதவிக்காலம் முடிவடைவதற்கு ஆறு மாதங்களுக்கு முன், பொதுத் தேர்தலை தேர்தல் கமிஷன் அறிவிக்கலாம். சட்ட விதிகளின்படி தேர்தலை நடத்த தயாராக உள்ளோம்.

ஆன்லைன் முறையில் ஓட்டளிப்பது குறித்த விவாதம் நடந்து வருகிறது. இது அமலுக்கு வர கால அவகாசம் தேவைப்படும்.

ம.பி.,யில் இறுதி வாக்காளர் பட்டியல், வரும் அக்., 5ல் வெளியிடப்படும். புதிய வாக்காளர்கள் தவறுகள் ஏதேனும் இருந்தால் விண்ணப்பித்து திருத்திக் கொள்ளலாம்.

மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடியே ஓட்டளிக்கலாம். சிறையில் உள்ள கைதிகளுக்கு சட்டப்படி ஓட்டளிக்க அனுமதி இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.