'இந்து மதம் எப்போது பிறந்தது, உருவாக்கியது யார் என்பது கேள்விக்குறியாக உள்ளது' – கர்நாடக உள்துறை மந்திரி பேச்சு

பெங்களூரு,

சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துக்கு பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதற்கிடையே அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு, ஓய்வுபெற்ற நீதிபதிகள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட 262 பேர் கடிதம் எழுதினர்.

மேலும் சனாதன பேச்சு தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் உள்ள சிவில் லைன்ஸ் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் உதயநிதியின் கருத்துக்கு ஆதரவாக பேசிய கர்நாடக மந்திரி பிரியங் கார்கே மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தின் உள்துறை மந்திரி ஜி.பரமேஷ்வரா நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ‘உலகத்தின் வரலாற்றில் பல மதங்கள் இருக்கின்றன. இதில் இந்து மதம் எப்போது பிறந்தது? உருவாக்கியது யார்? என்பது கேள்விக்குறியாக உள்ளது. இன்று வரை இதற்கு பதில் இல்லை.

புத்த மதமும், சமண மதமும் இந்தியாவில் தோன்றிய மதங்கள். அதே போல் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் ஆகியவை வெளிநாடுகளில் இருந்து வந்த மதங்கள் என்பது சான்றுகள் உள்ளன. மனித குலத்திற்கான நன்மையே அனைத்து மதங்களின் சாராம்சமாக உள்ளது” என்று தெரிவித்தார். அவரது கருத்துக்கு கர்நாடக பா.ஜ.க.வினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.