கார் விபத்தில் சிக்கிய மலையாள நடிகர் ஜாய் மேத்யூ
மலையாள சினிமாவில் குணச்சித்திர நடிகர்களில் முக்கியமானவர் ஜாய் மேத்யூ. மலையாளத்தில் வெற்றி பெற்ற ஷட்டர் மற்றும் அங்கிள் என, இருக்கையில் அமரவைத்த திரில்லிங் படங்களுக்கு கதை எழுதியவரும் இவர்தான். தமிழில் தேவி, கிணறு என இரண்டு படங்களில் நடித்துள்ள இவர் மலையாள திரை உலகில் பிசியான குணச்சித்திரன் நடிகராக நடித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு கேரளாவில் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது இவரது கார் விபத்துக்குள்ளானதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எர்ணாகுளத்தில் இருந்து கோழிக்கோடுக்கு காரில் பயணித்தபோது எதிரில் வந்த ட்ரக்கின் மீது அவரது கார் போதி விபத்துக்குள்ளானது. அருகில் இருந்தவர்கள் ஜாய் மேத்யூவையும் பலத்த காயமடைந்த டிரக்கின் ஓட்டுனரையும் விரைந்து அருகில் இருந்த நகரத்தின் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். தற்போது ஜாய் மேத்யூவுக்கு தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது. திரையுலகை சேர்ந்தவர்களும் ரசிகர்களும் இவர் விரைவாக குணமாக வேண்டும் என பிரார்த்தனைகளை வெளியிட்டு வருகின்றனர்