பைடனின் இந்திய பயணத்தில் மாற்றம் இல்லை: வெள்ளை மாளிகை அறிவிப்பு| No change to Bidens India trip: White House announcement

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

வாஷிங்டன்: ‘அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ‘ஜி – 20′ மாநாட்டில் பங்கேற்பதற்காக புதுடில்லி பயணிப்பதில் எவ்வித மாற்றமும் இல்லை. அவர் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி பயணம் மேற்கொள்வார்’ என, வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

‘ஜி – 20’ அமைப்பின் உச்சி மாநாடு, புதுடில்லியில் செப்., 9, 10 தேதிகளில் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக, பல்வேறு நாட்டு தலைவர்களும் புதுடில்லிக்கு வருகை தர துவங்கிவிட்டனர்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புதுடில்லியில் நடக்கும் ஜி – 20 மாநாட்டில் பங்கேற்றுவிட்டு அப்படியே தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாம் செல்ல ஏற்கனவே திட்டமிடப்பட்டு இருந்தது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு, கடந்த 4ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, அதிபர் ஜோ பைடன், புதுடில்லியில் பயணம் கேள்விக்குறியானது.

அதிபர் பைடனுக்கு கடந்த 4 மற்றும் 5ம் தேதி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இல்லை என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து, வெள்ளை மாளிகையின் ஊடக செயலர் கரீன் ழான்பியர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அதிபர் ஜோ பைடனின் இந்தியா மற்றும் வியட்நாம் பயணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. அதிபருக்கும், அவருடன் பயணம் செய்யவுள்ள இதர அதிகாரிகளுக்கும் தொடர்ந்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மைய கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை முழுமையாக பின்பற்றி அதிபர் பயணம் மேற்கொள்வார். இவ்வாறு கூறினார்.

அதிபர் ஜோ பைடன் திட்டமிட்டபடி இன்று புதுடில்லி வருவார் என்றும், நாளை பிரதமர் மோடியை சந்தித்து பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.