தாய், மகன் கொலை மர்ம கும்பலுக்கு வலை
பெங்களூரு: வீட்டுக்குள் நுழைந்த மர்ம கும்பல், தாயையும், மகனையும் கொலை செய்துவிட்டு தப்பியோடியது.
ஆந்திராவை சேர்ந்த பெண் நவநீதம், 34. பெங்களூரின், கால் சென்டர் ஒன்றில் பணியாற்றினார். சந்துரு என்பவரை திருமணம் செய்து கொண்டார். தம்பதிக்கு சாயி சுஜன், 8, என்ற மகன் உள்ளார்.
தம்பதி இடையே மனஸ்தாபம் ஏற்பட்டதால், கணவரை பிரிந்த மனைவி நவநீதம், இரண்டு ஆண்டுகளாக ரவீந்திர நகர், குட்டதஹள்ளியில் மகனுடன் வசித்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, இவர்களின் வீட்டுக்குள் நுழைந்த மர்ம கும்பல், நவநீதத்தை கழுத்தை அறுத்து கொலை செய்தனர். அதன்பின் அவரது மகனை கழுத்தை நெரித்து, கொலை செய்துவிட்டு தப்பியோடினர்.
நேற்று காலை இதை கவனித்த அக்கம், பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு வந்த பாகல்குன்டே போலீசார், தாய், மகனின் உடல்களை மீட்டு, பரிசோதனைக்கு அனுப்பினர்.
கொலைக்கு என்ன காரணம் என்பது, தற்போதைக்கு தெரியவில்லை. சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட, வடக்கு மண்டல டி.சி.பி., சிவ பிரகாஷ் தேவராஜ், குற்றவாளிகளை கண்டுபிடிக்க, தனிப்படை அமைத்துஉள்ளார்.
தன்னை விட்டு பிரிந்ததால், கணவர் சந்துருவே, மனைவி, மகனை கொன்றிருக்கலாம் என, நவநீதம் குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.
2 பெண்களுடன் கள்ளத்தொடர்பு இன்ஸ்பெக்டர் மீது மனைவி புகார்
யஸ்வந்த்பூர்: தன் கணவர், இரு பெண்களுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாகவும், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும் சி.ஐ.டி., இன்ஸ்பெக்டர் மீது, போலீசில் மனைவி புகார் அளித்துள்ளார்.
பெங்களூரில் சி.ஐ.டி., பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் மல்லிகார்ஜுன், 38. இவர் மீது யஸ்வந்த்பூர் காவல் நிலையத்தில் மனைவி பவானி அளித்த புகார்:
எனக்கும், சி.ஐ.டி., பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் மல்லிகார்ஜுனுக்கும், 2012ல் திருமணம் நடந்தது. திருமணத்தின்போது வரதட்சணை வேண்டாம் என்றார். ஆனால் அவரது அண்ணன் பசப்பா, எங்களிடம் இருந்து 8 லட்சம் ரூபாய் ரொக்கம், 250 கிராம் தங்க நகைகள், 5 கிலோ வெள்ளிப் பொருட்களை, வரதட்சணையாக வாங்கினார்.
திருமணம் முடிந்த சில நாட்களில், மல்லிகார்ஜுனுக்கு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருப்பது எனக்கு தெரிந்தது. இதுபற்றி கேட்டபோது என்னை அடித்து, உதைத்தார். இதனால் எனது சொந்த ஊரான சித்ரதுர்காவுக்குச் சென்றேன். அங்கு வந்து சமாதானம் செய்து, என்னை அழைத்து வந்தார்.
இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன்பு, அவருக்கு இளம்பெண் ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
அதன்பின்னர் கூடுதல் வரதட்சணை வாங்கிவரும்படி, மல்லிகார்ஜுனும், அவரது அண்ணன் பசப்பாவும் எனக்கு தொல்லை கொடுக்கின்றனர்.
கள்ளக்காதலிகளுடன் உல்லாசமாக இருந்துவிட்டு, தினமும் என்னை அடித்து உதைக்கிறார். கொலை மிரட்டலும் விடுக்கிறார். மல்லிகார்ஜுன், பசப்பா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. புகாரின்படி, போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
சாமியாரை கொன்ற நண்பர்கள் சிக்கினர்
உடுமலை : திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம், மைவாடி என்.எல்.சி., பவர் கிரிட் அருகே, கருப்புச்சாமி புதுார் செல்லும் ரோட்டில், அமராவதி பிரதான கால்வாய் பாலத்தின் கீழ், 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது.
காவி வேஷ்டி, துண்டு, கழுத்தில் பலருத்ராட்ச மாலைகள், கைகளில் ருத்ராட்ச காப்பு அணிந்து, முகம், உடல் சிதைந்த நிலையில் இருந்த உடலை, மடத்துக்குளம் போலீசார் மீட்டு, முருகன், பட்டுப்பாண்டி ஆகிய இருவரை கைது செய்தனர்.
![]() |
போலீசார் கூறியதாவது:
கொலையானவர் துாத்துக்குடியைச் சேர்ந்த மதியழகன், 30. சாமியாராக ஊர், ஊராக சுற்றி வந்துள்ளார். மடத்துக்குளம், யூனியன் ஆபீஸ் அருகே பழைய இரும்புக்கடையில், திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையைச் சேர்ந்த முருகன், 33, பட்டுப்பாண்டி, 40, வேலை செய்தனர்.
மூன்று பேருக்கும் ஏற்கனவே நட்பு இருந்த நிலையில், கடந்த, 4ம் தேதி, மதியழகன் மடத்துக்குளம் வந்துள்ளார். மூவரும் கழுகரையில் மது அருந்தியுள்ளனர்.
அப்போது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதில், மூவரும் இரும்பு கடைக்கு வந்துள்ளனர். மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், முருகன், பட்டுபாண்டி சேர்ந்து, மதியழகனை கல்லால் தாக்கியும், கட்டையால் அடித்தும் கொலை செய்துள்ளனர்.
பின்னர், கால்வாய் பாலத்திற்கு கீழ் பிணத்தை வைத்து, முள், செடிகளால் மூடி தப்பிய நிலையில் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு போலீசார் கூறினர்.
மாமியார் கொலை மருமகளுக்கு ‘கம்பி’
செஞ்சி : விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த பாண்டியங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர், 33; ஆட்டோ டிரைவர். விபத்தில் காலை இழந்த இவர், வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இவரது மனைவி சங்கீதா, 28, கூலி வேலை செய்து கணவன், மாமியாரை காப்பாற்றினார்.
![]() |
இவருக்கு சில ஆண்களுடன் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. மாமியார் சின்னபாப்பா, 63, சங்கீதாவை கண்டித்தார்.
நேற்று முன்தினம் இது தொடர்பான தகராறில், சின்னபாப்பாவை கீழே தள்ளி,சங்கீதா மரக்கட்டையால் தலையில் அடித்தார். இதில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். செஞ்சி போலீசார் சின்னபாப்பா உடலை கைப்பற்றி, சங்கீதாவை கைது செய்தனர்.
அரிவாளுடன் பதிவிட்டவர் கைது
துாத்துக்குடி : சமூக வலைத்தளத்தில் அரிவாளுடன் படம் பதிவிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
துாத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே தென்னம்பட்டியை சேர்ந்தவர் கணேச மூர்த்தி 21.
![]() |
இவர் இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் சண்டியர் மூர்த்தி – என்ற பெயரில் கையில் அரிவாளுடன் வீடியோ பதிவிட்டிருந்தார்.
பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் ஜாதி மத மோதலை துாண்டும் வகையிலும் இருந்ததால் எஸ்.பி., பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் தனிப்படையினர் அவரை கைது செய்தனர்.
சிறுமி கர்ப்பம் டிரைவருக்கு ‘போக்சோ’
தி.மலை: திருவண்ணாமலை அடுத்த நாறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சசிகுமார், 29; லாரி டிரைவர். இவர், 16 வயது சிறுமியுடன் பழகி, ஆசை வார்த்தை கூறி தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது.
சிறுமியின் உடல் நலம் பாதித்ததால், அவரது பெற்றோர், திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று, பரிசோதித்ததில் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக உறுதியானது.
சிறுமியின் பெற்றோர் புகார் படி, போலீசார், சசிகுமாரை போக்சோவில் கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்