திருப்பதி, : திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் நடைபாதையில் வனத்துறையினர் வைத்திருந்த கூண்டில், மேலும் ஒரு சிறுத்தை சிக்கியது. இது அப்பகுதி யில் சிக்கிய ஐந்தாவது சிறுத்தை.
ஆந்திர மாநிலம், நெல்லுாரைச் சேர்ந்த சிறுமி, சமீபத்தில் தன் குடும்பத்தினருடன் திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு மலைப்பாதை வழியாக சென்றார்.
அப்போது சிறுத்தை தாக்கி பலியானார். இதைஅடுத்து திருமலை செல்லும் வழியில் உள்ள நடைபாதையில் கூண்டுகள் வைத்து சிறுத்தைகளை வனத்துறையினர் பிடித்து வருகின்றனர்.
இதுவரை நான்கு சிறுத்தைகள் பிடிபட்ட நிலையில் நேற்று, மேலும் ஒரு சிறுத்தை பிடிபட்டது.
திருமலை செல்லும் வழியில் நரசிம்ம சுவாமி கோவில் எல்லைக்கு இடைப்பட்ட பகுதியில் நேற்று அதிகாலை கூண்டில் இந்த சிறுத்தை சிக்கியது. இது தொடர்பாக திருப்பதி மாவட்ட வனத்துறை அதிகாரி ஏ.சீனிவாசுலு கூறியதாவது:
பிடிபட்டது, 2 வயதே ஆன பெண் சிறுத்தை. இதை ஸ்ரீ வெங்கடேஸ்வரா வன உயிரியல் பூங்காவுக்கு கொண்டு சென்று தனிமைப்படுத்தியுள்ளோம்.
இதை சோதனைக்கு உட்படுத்தி, மனித சதையின் தடயங்கள் எதுவும் அதன் வயிற்றில் உள்ளதா என உறுதி செய்தபின் தொலை துார வனப்பகுதியில் விடுவிக்கப்படும்.
ஏற்கனவே சிறுமியை கொன்றதாக கூறப்படும் பிடிபட்ட சிறுத்தையிடம் நடத்தப்பட்ட சோதனை முடிவுகள் இன்னும் கிடைக்கவில்லை.
திருமலை நடைபாதையில், 330 கேமராக்கள் பொருத்தி விலங்குகள் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது. திருமலை கோவில் நடைபாதை அருகே விலங்குகள் நடமாட்டம் இருந்தால் அவை கூண்டு வைத்து பிடிக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement