தி.மு.க-வின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஐ.பெரியசாமி. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அமைச்சரவையில் முக்கியமான துறைகளின் அமைச்சராகவும் இருந்தவர் ஐ.பெரியசாமி. தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராகச் செயல்பட்டு வருகிறார். 2008-ம் ஆண்டில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு, ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்டது.
இந்த புகார் தொடர்பாக ஐ.பெரியசாமி உள்ளிட்டோர்மீது 2012-ம் ஆண்டு, அ.தி.மு.க ஆட்சியின்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர். தன்மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் ஐ.பெரியசாமி சார்பில் எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெயவேல் முன்பு கடந்த மார்ச் 18-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அமைச்சர் ஐ.பெரியசாமி சார்பில் வழக்கறிஞர்கள் ரகுநாதன், ஏ.சரவணன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
இந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கிலிருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து, உத்தரவிட்டார். இந்த வழக்கைத்தான் தாமாக முன் வந்து இன்று (07.09.23) விசாரணைக்கு எடுத்திருக்கிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.
இதேபோல 2001-2006 வரையிலான அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த வளர்மதி, அவரது குடும்பத்தினருக்கு எதிராக சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கிலிருந்து வளர்மதி உள்ளிட்டோரை விடுவித்து ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், 2012-ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்திருக்கிறார், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். இந்த இரு வழக்குகளும் நாளை (செப்டம்பர் 8) விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டிருக்கின்றன.
ஏற்கெனவே அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர்மீது தாமாக முன் வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்த அனைத்து வழக்குகளும் ஆய்வுசெய்யப்படும் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், தற்போது அமைச்சர் பெரியசாமி, முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோர் மீதான வழக்கை விசாரணைக்கு எடுத்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY