சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எந்த மதத்தையும், மத நம்பிக்கைகளையும் புண்படுத்தும் வகையில் பேசவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, மக்களை திசைதிருப்பி, சனாதன போர்வையை போர்த்திக் கொண்டு குளிர்காய நினைப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னையில் நடந்த சனாதன எதிர்ப்பு மாநாட்டில் பேசிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி, சனாதனம் குறித்த சில கருத்துகளை தெரிவித்தார். ‘பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தவர், பழங்குடியினர், பெண்ணினத்துக்கு எதிரான ‘சனாதன கோட்பாடுகளை ஒழிக்க வேண்டும்’ என்றுதான் அவர் பேசினாரே தவிர, எந்த மதத்தையும், மத நம்பிக்கைகளையும் புண்படுத்தும் வகையில் பேசவில்லை.
பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத் தாழ்வையும், பெண்ணடிமைத்தனத்தையும் நியாயப்படுத்தும் பழமைவாத வர்ணாசிரம, மனுவாத, சனாதன சிந்தனைகளுக்கு எதிராக, பெரியார், அம்பேத்கர், ஜோதிபா பூலே, நாராயணகுரு, வள்ளலார், வைகுண்டர் என பல பெரியோர்கள் குரல் கொடுத்து வந்துள்ளனர்.
சாதி வேற்றுமைகள் கற்பித்தும், வர்ணாசிரம கருத்துகளை சொல்லி பாகுபாடுகளை வலியுறுத்தியும் இவற்றுக்கு ஆதரவாக சாஸ்திரங்கள், பழைய நூல்களை மேற்கோள் காட்டி சிலர் பிரச்சாரம் செய்கின்றனர். குழந்தை திருமணத்தை ஆதரித்து ஆளுநரே பேசுகிறார். குழந்தை திருமணம் செய்தவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுத்தால், தடை போடுகிறார். பெண்களை இழிவுபடுத்தியும், ‘வேலைக்கு போக கூடாது, கணவனை இழந்தால் மறுமணம் செய்ய கூடாது’ என்றும் சிலர் ஆன்மிக மேடைகளில் பேசி வருகின்றனர்.
‘சனாதனம்’ என்ற சொல்லை வைத்து, சமூகத்தின் சரிபாதிக்கும் அதிகமான பெண் இனத்தை அடிமைப்படுத்த நினைக்கின்றனர். இதற்கு எதிராகத்தான் அமைச்சர் உதயநிதி பேசினார். இதை தாங்கிக்கொள்ள முடியாத பாஜக ஆதரவு சக்திகள், ‘சனாதன எண்ணம் கொண்டவர்களை இனப்படுகொலை செய்யச் சொன்னார் உதயநிதி’ என்று பொய்யை பரப்பினர். ‘இனப்படுகொலை’ என்ற சொல்லை தமிழிலோ, ஆங்கிலத்திலோ அமைச்சர் உதயநிதி எந்த இடத்திலும் சொல்லவில்லை. ஆனால், அப்படி சொன்னதாக வதந்தி பரப்பினர்.
பொறுப்பான பதவியில் உள்ள மத்திய அமைச்சர்கள், பாஜக முதல்வர்கள் ஆகியோர் உண்மையில் உதயநிதி என்ன பேசினார் என்பதை தெரிந்து கருத்து கூறியிருக்க வேண்டும். மாறாக, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டவர்கள் அதே பொய் செய்தியையே பரப்பி, உதயநிதியை கண்டித்துள்ளனர். ‘நான் அப்படி பேசவில்லை’ என்று உதயநிதி தெரிவித்துவிட்ட பிறகாவது, தங்கள் பேச்சுகளை மத்திய அமைச்சர்கள் மாற்றியிருக்க வேண்டும்.
அமைச்சர் உதயநிதியின் தலைக்கு உத்தர பிரதேச ஆன்மிகவாதி ஒருவர் ரூ.10 கோடி விலை அறிவித்துள்ளார். உத்தர பிரதேச அரசு அவர் மீது வழக்கு போடாமல், உதயநிதி மீது வழக்கு போட்டுள்ளது.
இந்நிலையில், ‘சனாதனம் பற்றி தவறாக பேசினால் உரிய பதிலடி கொடுக்க வேண்டும்’ என்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாக செய்திகள் வந்துள்ளன. உதயநிதி சொல்லாத ஒன்றை சொன்னதாக பரப்பியது குறித்து, பிரதமர் அறியாமல் பேசுகிறாரா? சில வாரங்கள் முன்பு, அமைச்சர் எ.வ.வேலு பேசிய வீடியோவின் உண்மைத்தன்மையை அறியாமல், நாடாளுமன்றத்திலேயே பிரதமர் பேசியிருந்தார். இவற்றை பார்த்தால், மக்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாத பிரதமர். தற்போது மக்களை திசைதிருப்பி, சனாதன போர்வையை போர்த்திக் கொண்டு குளிர்காய நினைப்பதாகவே தெரிகிறது.
மணிப்பூர் விவகாரம், சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ள முறைகேடுகள் குறித்து பிரதமர், மத்திய அமைச்சர்கள் இதுவரை எந்த பதிலும் கூறவில்லை. ஆனால், சனாதனம் பற்றி பேசியவுடன், அமைச்சரவையே கூடியிருக்கிறது.
பாஜகவுக்கு எதிரான கட்சிகள் உருவாக்கியுள்ள இண்டியா கூட்டணி, பிரதமரை நிலைதடுமாற வைத்துவிட்டது. ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என ஏதோ பூச்சாண்டி காட்டி வருகிறார். மக்களவை தேர்தலை பார்த்து பயந்திருப்பது பாஜகதானே தவிர, இண்டியா கூட்டணி அல்ல.
வெளிப்படையான கொள்கைகள்: திமுகவின் கொள்கை, கோட்பாடுகள் வெளிப்படையானவை. நாட்டிலேயே முதலில் பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை கொடுத்து, சனாதனம் மறுத்ததை சாத்தியமாக்கியது திமுக. கொள்கையை அறிவுப் பிரச்சாரம் செய்தவர்களே தவிர, எந்த காலத்திலும் வன்முறையில் நம்பிக்கை இல்லாத இயக்கம். அத்தகைய பழம்பெரும் பேரியக்கம் மீது களங்கம் கற்பிப்பதன் மூலமாக அரசியல் செய்ய நினைத்தால், அந்த புதைகுழியில் பாஜகதான் மூழ்கும். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.