Actor Marimuthu: `எதிர்நீச்சல்' மாரிமுத்து திடீர் மரணம் – மாரடைப்பால் உயிர் பிரிந்தது!

நடிகர் மாரிமுத்து மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்திருக்கிறார். தற்சமயம் அவரது உடல் சென்னை வடபழனியிலுள்ள தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இன்று காலையிலேயே ‘எதிர்நீச்சல்’ சீரியலுக்கு டப்பிங் பேச டப்பிங் தியேட்டருக்கு வந்திருக்கிறார் மாரிமுத்து. அவருடன் நடிகர் கமலேஷ் உள்ளிட்டோர் இருந்திருக்கிறார்கள். டப்பிங் பேசிக் கொண்டிருந்த போதே நெஞ்சு வலிப்பதாகச் சொல்லியுள்ளார் மாரிமுத்து. அருகிலிருந்த கமலேஷ் உள்ளிட்டோர் வடபழனியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றுள்ளனர்.

மாரிமுத்து

மருத்துவமனையில் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், மாரிமுத்துவின் உயிர் பிரிந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். தற்போது ‘எதிர்நீச்சல்’ தொடரின் நடிகர் நடிகைகள் மற்றும் சினிமா, டிவி நட்சத்திரங்கள் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.

நடிகர் மாரிமுத்துவின் சொந்த ஊர் தேனி மாவட்டம். எனவே உடலை அங்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்ய அவரது குடும்பத்தினர் முடிவு செய்திருக்கிறார்கள். தற்போது ‘எதிர் நீச்சல்’ தொடரில் ஆதி குணசேகரனாக மக்கள் மனதில் ரீச் ஆகியிருந்தாலும் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார் மாரிமுத்து. இயக்குநராகவும் சில படங்களை இயக்கியுள்ளார். இயக்குநராகும் கனவோடுதான் அவர் சென்னைக்கே வந்திருந்தார் என்பதையும் அவரே பல பேட்டிகளில் தெரிவித்திருந்தார்.

`எதிர்நீச்சல்’ மாரிமுத்து

நிறையப் படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் வில்லன் வேடங்களிலும் நடித்து கவனத்தை ஈர்த்தவர், சமீபத்தில் வெளியான ‘ஜெயிலர்’ படத்திலும் குறிப்பிடத்தகுந்த வேடத்தில் நடித்திருந்தார். பேட்டிகள், ரியாலிட்டி ஷோக்களிலும் வெளிப்படையாகப் பேசும் அவரின் தன்மை, ஆஃப் ஸ்க்ரீனிலும் அவருக்கு நிறைய ரசிகர்களை உருவாக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.