காலையில் இப்படி ஒரு செய்தி வரும் என கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இயக்குநரும், குணசித்திர நடிகருமான மாரிமுத்து, மாரடைப்பு காரணமாக இறந்து போனது இன்னமும் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.
தேனி மாவட்டத்திலிருந்து திரைப்படக் கனவோடு சென்னை வந்த மாரிமுத்து. பல வருடங்களாக பல இயக்குநர்களுடன் பயணித்தவர். கிட்டத்தட்ட 30 வருடங்களாக திரைத்துறையில் இருக்கிறார். பல வருட முயற்சிக்குப் பிறகு, மாரிமுத்து இயக்குநராக அறிமுகமான ‘கண்ணும் கண்ணும்’ திரைக்கு வரும் போது, நான் விகடனில் செய்தியாளராக இருந்தேன். அந்த சமயத்தில் இருந்தே நட்பாகி, இன்றும் தொடர்ந்து வந்தது. வயதில் சின்னவரோ, பெரியவரோ எவரையுமே எப்போதும் ‘சார்’ என்றே அழைப்பார். அவருக்கு ஒருமுறை ‘பிறந்த நாள் வாழ்த்துகள் சொன்னேன்’ முகமெல்லாம் மலர்ச்சியாக ‘ரொம்ப சந்தோஷம் சார்.. மகிழ்ச்சி’ என்றவர், பேச்சு வாக்கில் ‘உங்க பிறந்த நாள் எப்போது வருகிறது?’ எனக் கேட்டார். நானும் என் பிறந்த நாள் பற்றி சொன்னேன். ஆறெழு மாதத்திற்கு பின், என் பிறந்த நாளன்று என் புகைப்படத்தோடு, இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.. அன்புடன் மாரிமுத்து’ என மிக அழகாக வடிவமைத்த போட்டோவை என் பிறந்த நாளன்று அதிகாலை அனுப்பி வைத்தார்.
என்னால் மறக்கவே முடியாத வாழ்த்தாக அந்த வாழ்த்து அமைந்தது. எப்படி சார்.. இப்படி அசத்துறீங்க? எனக் கேட்டேன். அதற்கு அவர், ”எனக்கு ரொம்ப பிடிச்சவங்க எல்லோரோட பிறந்த தேதியையும் குறிச்சு வச்சுக்குவேன். இதுக்கென ஒரு டைரி போட்டிருக்கேன் சார்” எனச் சொல்லி குழந்தையாகப் புன்னகைத்தார். அதன் பிறகு அவருக்கு தோணின நண்பர்கள் தினத்தில் இருந்து உலக சுற்றுச்சூழல் தினம் வரை தனது கவிதை வரிகளுடன், தன் புகைப்படத்தையும் வைத்து மாரிமுத்து என்ற கையெழுத்துடன் லேஅவுட் செய்து, வாட்ஸ் அப்பில் தன் நட்பு வட்டத்தினருக்கு அனுப்பி வைத்திருந்தார்.
கவிதை நல்லா இருக்கு சார்… என்றால் உற்சாகமாகிவிடுவார். ”எங்க கிராமத்துல இருந்து ஸ்கூலுக்கு பதினைஞ்சு கிலோ மீட்டர் தூரம் நடந்தே போய் படிச்சிருக்கேன் சார். பத்தாவது வரைக்குமே முதல் மாணவனா வந்திருக்கேன். என் கையெழுத்து அவ்வளவு அழகா இருக்கும்..” என்பார். ஒரு சமயம் பிரசாத் லேப் பிரிவியூ தியேட்டரில் அவரை சந்திச்சேன். அவர் நடித்த படம் ஒன்றின் திரையிடல் என்பதால், அவரும் வந்திருந்தார். அதில் அவர் ஆசிரியராக நடித்திருந்தார். படம் முடித்து வந்ததும் அவருக்கு அன்று ஆசிரியர் தினம் என்பதால், ஆசிரியர் தின வாழ்த்துகள் என்று சொல்ல.. உற்சாகமாகச் சிரித்தார்.
”ஆசிரியர் தினத்தை ஞாபகப்படுத்திட்டீங்க.. டைம் டிராவல்ல போன மாதிரி ஒரு விஷயம் ஞாபத்திற்கு வருதுனார். நான் ஏழாவது படிக்கறப்ப எங்க தமிழாசிரியர் ஒரு இங்க் பேனா வச்சிருந்தார். ஹீரோ பேனா அது. அதோட விலை அப்பவே 25 ரூபா!.. அப்படி பேனா வாங்கணும்னு என்பதுதான் என் ரொம்ப வருஷ கனவு.. அப்புறம் பாடதபாடுபட்டு ஒரு ஹீரோ பேனா வாங்கினேன். எங்க குடும்பம் விவசாய குடும்பம்னால, ஒரு பக்கம் சின்ஸியரா படிப்பேன். இன்னொரு பக்கம் வயல் வேலை, மாடு மேய்க்கறதுனும் இருப்பேன்’ அந்த காலம் எல்லாமே எனக்கு ஞாபகத்துல வருதுனார்.
இதெல்லாம் இவன்கிட்ட எதுக்கு சொல்லணும்?னு அவர் நினைக்காமல், என் வாழ்க்கை திறந்த புத்தகம் என்பதை எனக்கு உணர்த்தினார். நான் ஆனந்த விகடனில் ஷோ புரொட்யூசராக இருந்த போது, ‘அவுட் ஆஃப் த டாபிக்’ என்ற ஷோவிற்கு அவரை அழைத்தேன். ‘எப்ப வரணும்னு சொல்லுங்க சார்.. வந்துடுறேன்’ என்று மறுநாளே வந்தார். காரை அவரே ஓட்டி வந்தார். 2021 நடந்த விஷயம் அது. ”விகடன் அலுவலகம் க்ரீம்ஸ் ரோட்டுல இருந்த போது வந்திருக்கேன். இந்த ஆபீஸை இப்போதுதான் பார்க்கறேன். வெள்ளைக்காரன் ஊர்ல உள்ள கட்டடம் மாதிரி இருக்குது சார்” என்றார் வியப்பாக.
இந்தாண்டில் அவர் ‘அன்னையர் தினத்திற்கு’ அவரது அம்மாவின் அன்பில் திளைத்த புகைப்படத்தோடு ஒரு வாழ்த்தை அனுப்பினார். நான் ஹார்டீனை பதிலாக அனுப்பினேன். அதன்பிறகு இந்தாண்டு பிப்ரவரியில் இருந்து சின்னத்திரையில் ‘எதிர்நீச்சல்’ தொடரில் பிஸியாக இருந்தார். அங்கே கிடைத்த இடைவெளியில்தான் படங்களிலும் நடித்து வந்தார். ‘ஜெயிலர்’ படத்தில் அவரது தோற்றம் இப்போதும் கண்ணுக்குள் நிற்கிறது. வாட்ஸ் அப்பில் இடை இடையியே அவர் பேசிய ஷார்ட்ஸ், ரீல்ஸ் வீடியோக்களை அனுப்பி வந்தார்.
அவரிடம் ரொம்ப பிடித்த விஷயம், ”என் படம் ரிலீஸ் ஆகியிருக்கு.. நீங்க பாத்தீங்களா? என அவர் ஒருநாளும் கேட்டதில்லை. ”பாருங்க” என்றும் அவர் சொன்னதில்லை. ”வாய்ப்பு வருது நடிக்கறேன் சார். உங்களுக்கு நேரம் கிடைச்சா, நீங்க பார்க்கப் போறீங்க.. அவ்வளவு தானே சார்?” என்று அவர் சொன்னது தான் இன்னமும் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
பல கால போராட்டம், கடின உழைப்பிற்குப் பிறகு சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் அவருக்கான வெளிச்சம் இப்போதுதான் கிடைக்கத் தொடங்கியது. அதற்குள் இப்படியொரு செய்தி மனதை கணக்கச் செய்கிறது. பிறரிடம் அளவில்லா அன்பு செலுத்திய யாரும் அத்தனை எளிதில் மறைந்துவிடுவதில்லை. எப்போதும் உடனிருப்பீர்கள். மிஸ் யூ மாரிமுத்து சார்!