சினிமா நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து எதிர்நீச்சல் என்ற சீரியல் மூலம் மிகவும் பிரபலமானார்.
அண்மையில் அந்த சீரியலில் நடித்த காட்சிகளில் அவர் பேசும் வசனங்களை கொண்டு மீம்ஸ்கள் அதிகமாக பகிரப்பட்டன. மேலும் அவர் இயல்பாக பேசக் கூடிய பேட்டிகளும் வைரல் ஆனது.
கண்ணும் கண்ணும், புலிவால் என்ற 2 படங்களை இயக்கியுள்ளார். வாலி, கொம்பன், கடைக்குட்டி சிங்கம் உள்பட 30 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். கடைசியாக ரஜினி நடித்த ஜெயிலர் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் அவர் பல முன்னணி படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். பெரிதும் எதிர்பார்ப்பில் உள்ள ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை எதிர்நீச்சல் சீரியலுக்கான டப்பிங் பணியில் இருந்தபோது நெஞ்சுவலி ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரின் உடல் சொந்த ஊரான தேனி மாவட்டம் வருசநாடு அருகே பசுமலைத்தேரி கிராமத்தில் இறுதிசடங்கு நடக்க உள்ளது.
அவரின் இறப்பு சொந்த ஊரான பசுமைமலைத்தேரி கிராமத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் மாரிமுத்து குறித்து நம்மிடம் பேசிய அவருடைய உறவினர் செந்தில்குமாரி, ” ஊர் நாட்டாமை குருசாமி, மாரியம்மாள் தம்பதிக்கு 4 பெண் பிள்ளைகள், 4 ஆண் பிள்ளைகள். இதில் 5 ஆவது பிள்ளையாக மாரிமுத்து பிறந்தார். எட்டு பேரில் மிகவும் செல்லப்பிள்ளையாக இருந்தார். மயிலாடும்பாறையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 12 ஆம் வகுப்பு வரை படித்தார். படிப்பில் மிகவும் கெட்டிக்காரர். பள்ளிப்படிப்பை முடித்தவுடன், சிவகாசியில் உள்ள பாலிடெக்னிக்கில் படித்தார். அப்போது கவிஞர் வைரமுத்து மீது தீவிர பற்றுக்கொண்டவராக இருந்தார். எப்போதும் புத்தகங்களை வாசித்துக் கொண்டே இருப்பார். நன்றாக பேசக்கூடிய திறமை பெற்றவராக இருந்தார். பாலிடெக்னிக் முடித்தால் வேலைக்குச் செல்ல கட்டாயப்படுத்தி விடுவார்கள் என நினைத்தவர், எங்கள் வீட்டின் சுவரில் கரிக்கட்டையால், “நான் சென்னைக்கு சினிமாவில் சேரப் போகிறேன். என்னை யாரும் தேட வேண்டாம். சினிமாவில் ஜெயித்தால் மட்டுமே திரும்பி வருவேன். இல்லையெனில் கடலில் மூழ்கி இறப்பேன். என்னை நினைத்து கவலைப்படாதே அம்மா” என எழுதி வைத்துவிட்டு யாருக்கும் தெரியாமல் சென்னைக்கு ஓடிவிட்டார்.
அதன்பிறகு உடற்பயிற்சி செய்வது யோகா செய்வது உணவுமுறைகளை சரியாக கடைபிடிப்பதில் உறுதியாக இருந்தார். உடல்நலத்தை கவனித்துக் கொள்ள வேண்டும் என மற்றவர்களுக்கு சொல்லுவார். ஊரில் கடந்த சில மாதங்களுக்கு முன் அவர் படித்த பள்ளி விழாவில் பங்கேற்று பேசினார். ஊருக்கு வந்தால் பாரபட்சமின்றி எல்லோரிடமும் நன்றாக சிரித்து பேசி போட்டோ எடுத்துவிட்டுச் சென்றார்.
அவரின் தாயார் மாரியம்மாள் சமையல் நன்றாக செய்வார். இதை அவர் அனைத்து பேட்டிகளிலும் பதிவு செய்திருந்தார். இதனால் சில யூடியூப் சேனல்கள் அவரை சொந்த ஊரில் அவரின் வீட்டில் வைத்து பேட்டி எடுக்க விரும்பியதாவும், அதனால் அடுத்த வாரம் அம்மாவை பார்க்க வீட்டிற்கு வருவதாகவும் கூறியிருந்தார்.
அம்மா மீது மிகவும் பாசமாக இருப்பார். ஒரு முறை 2 வாரங்கள் அம்மாவை சென்னைக்கு அழைத்துச் சென்று வைத்திருந்தார். அவரை சென்னைக்கே அழைத்துச்சென்று வைத்துக் கொள்ளவும் திட்டமிட்டிருந்தார். அதனால் தான் ஊரை விட்டு ஓடும் போதும் கூட, `அம்மா என்னை நினைத்து கவலைப்படாதே!’ என எழுதி வைத்துவிட்டு சென்றார்.
கடைசியாக அம்மாவை பார்க்காமலே உயிரிழந்துவிட்டார். அவரின் இழப்பு எங்களை பெரும் துயரில் ஆழ்த்திவிட்டது என்றார்.