பி.வாசுவின் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள `சந்திரமுகி 2′ படம் வருகிற 15ம் தேதி திரைக்கு வரும் என அறிவித்தனர். இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகிறது என்று கோடம்பாக்கத்தில் பேச்சு எழுந்திருக்கிறது.
ரஜினி – பி.வாசுவின் கூட்டணியில் பிரமாண்ட வெற்றி பெற்ற படம் ‘சந்திரமுகி’. அதன் இரண்டாம் பாகம் எப்போது வருமெனப் பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் ‘சந்திரமுகி 2’ உருவானது. இப்படத்தில் ராகவா லாரன்ஸ், ராதிகா, கங்கனா ரணாவத், வடிவேலு, லட்சுமிமேனன், ரவிமரியா, மகிமா நம்பியார் எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவில் கீரவாணி இசையமைத்துள்ளார். இப்படம் இந்த 15-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாள்களை முன்னிட்டு திரைக்கு வருவதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இப்போது படத்தின் வெளியீடு தள்ளிப்போயிருக்கிறது என்கிறார்கள். இதுகுறித்து விசாரித்தோம்.
“சந்திரமுகி – 2’வின் டிரெய்லர் வெளியீட்டிற்கு முன்னர், கிராபிக்ஸ் மற்றும் வி.எஃப்.எக்ஸ். பணிகள் ஓரளவு இருந்தாலே போதும் என நினைத்தனர். ஆனால், படத்தின் டிரெய்லர் மற்றும் கங்கனா ஆடும் ‘ஸ்வாகதாஞ்சலி’ லிரிக் வீடியோவும் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், படத்தின் எதிர்பார்ப்பு அதிகமானது. அதைக் கருத்தில் கொண்டு கிராபிக்ஸ் மற்றும் வி.எஃப்.எக்ஸ் வேலைகளை இன்னும் செதுக்க நினைத்தார்கள். எனவே அரண்மனை, ராட்சத பாம்பு உட்படப் பல விஷயங்களிலும் கவனம் செலுத்தப் படத்தைத் தயாரித்துள்ள லைகா நிறுவனம் முடிவு செய்தது.
இதுகுறித்து ஆலோசிக்கும் போது கிராபிக்ஸ் வேலைகளுக்கு இன்னும் சில வாரங்கள் தேவைப்படும் என்பதால், ரிலீஸைத் தள்ளி வைக்க முடிவு செய்தனர். எனவே, படத்தை செப்டம்பர் 28ம் தேதி அன்று வெளியிட முடிவு செய்துள்ளனர்.
செப்டம்பர் 15-ம் தேதி, விஷால், எஸ்.ஜே.சூர்யா நடித்து வெளிவரவிருக்கும் `மார்க் ஆண்டனி’ படத்தோடுதான் `சந்திரமுகி 2′ மோதுவதாக இருந்தது. தற்போது `சந்திரமுகி தரிசனம்’ இரண்டு வாரங்கள் தள்ளிப்போயிருக்கிறது.