பெங்களூர்:
கர்நாடகாவில் உள்ள வங்கிகளுக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் இனி கன்னட மொழியில்தான் பேச வேண்டும் என்று அம்மாநில அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான அரசாணை ஓரிரு தினங்களில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபகாலமாக தமிழகம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் உள்ள வங்கிகளில் வட மாநிலங்களைச் சேர்ந்த ஊழியர்கள் அதிக அளவில் இருப்பதை பார்க்க முடிகிறது. குறிப்பாக, இந்தியை தாய்மொழியாக கொண்டவர்களே அதிகமாக இருக்கிறது. அவர்களுக்கு இந்தி, ஆங்கிலத்தை தவிர வேறு எந்த மொழியும் தெரிவதில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் கூறுவது ஊழியர்களுக்கும், ஊழியர்கள் பேசுவது வாடிக்கையாளர்களுக்கும் புரிவதில்லை.
இதனால் பல நேரங்களில் தகராறுகளும் நடந்திருக்கின்றன. இந்நிலையில், இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக் கொண்ட அப்போதைய கர்நாடகா பாஜக அரசு கடந்த மார்ச் மாதம் கன்னட மொழி வளர்ச்சி சட்டத்தை கொண்டு வந்தது. இந்த சட்டத்தின்படி, கர்நாடகாவில் 100 பேருக்கு அதிகமான ஊழியர்களை வைத்திருக்கும் வங்கிகள் அல்லது நிறுவனங்கள், ‘கன்னட செல்களை’ (Kannada Cells) அமைக்க வேண்டும். இந்த செல்களில் இருப்பவர்கள், வாடிக்கையாளர்களுடன் கன்னட மொழியில் உரையாற்றுவதோடு மட்டுமல்லாமல் வேறு மொழி ஊழியர்களுக்கு கன்னடமும் சொல்லிக் கொடுப்பார்கள். இதுதான் இந்த சட்டத்தின் அம்சம்.
இதனிடையே, கர்நாடகா தேர்தலில் பாஜக அரசு தோல்வி அடைந்ததால், இந்த சட்டத்தை அமல்படுத்தும் நடவடிக்கை கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், மக்கள் கோரிக்கை வலுத்ததை அடுத்து இந்த சட்டம் தொடர்பான அரசாணையை ஓரிரு தினங்களில் பிறப்பிக்க கர்நாடகா அரசு தயாராகி வருவதாக அமைச்சர்கள் தெரிவிக்கின்றனர்.