சென்னை:
“பாரதம் என்று சொன்னாலே சிலர் பதைபதைத்து போவது ஏன்?” என்று பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வியெழுப்பியுள்ளார்.
இந்தியா என்ற பெயரை ‘பாரத்’ என்று மாற்றுவதற்கு மத்திய அரசு எத்தனித்து வருவதாக கூறப்படுகிறது. பாஜக மூத்த தலைவர்கள் பலரும் இதனை ஆதரித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதே சமயத்தில், இதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. “இந்தியா என்ற பெயரை மாற்றுவதால் மட்டும் நாட்டின் விலைவாசியும், வேலையில்லா திண்டாட்டமும் குறைந்துவிட போகிறதா?” என அந்தக் கட்சிகள் கேள்வியெழுப்பி வருகின்றன.
இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் வகையில் பாஜக மாநிலத் துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “‘India that is Bharat’ என்றால், பாரதம் என்கிற இந்தியா என்றே தமிழில் பொருள்படும். அதாவது பாரதம் இந்தியா என்று அழைக்கப்படுகிறது என்றே சொல்கிறது. ஆனால் பாரதம் என்று சொன்னாலே பதைபதைத்து போகிறார்களே சிலர்? இன்றும் பாகிஸ்தான், அரபு நாடுகள் மற்றும் இஸ்லாமிய நாடுகள் பலவற்றில் இந்தியாவை ஹிந்துஸ்தான் என்றே குறிப்பிடுகிறார்கள்.
அதே போல் ஹிந்துஸ்தான் என்று அழைத்தால் எப்படியெல்லாம் குதிப்பார்களோ?தற்போதைய இந்தியாவை பரத கண்டம், ஜம்புத்தீவு என்றழைத்த காலங்கள் குறித்து அறியாத சிலர் துள்ளிக் குதிப்பதை நிறுத்தி கொள்ளவும். ஏதோ புத்திசாலித்தனமாக கூட்டணி பெயரை வைத்து விட்டதாக நெஞ்சை தட்டி கொண்டவர்கள், தற்போது நெஞ்சை பிடித்துக் கொள்வது ஏனோ? ” ‘India that is Bharat’. இவ்வாறு நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.