இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து மாரடைப்பால் இன்று காலை காலமானார். அவரது மறைவு தமிழ் சினிமா வட்டாரத்திலும் சின்னத்திரை வட்டாரத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விருகம்பாக்கத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு திரையுலகினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் சீமான், மாரிமுத்து குறித்து உருக்கமாக பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தன் உயிர்க்கினிய சகோதரர் மாரிமுத்து மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார் என்ற செய்தியை அறிந்து பேரதிர்ச்சியும், பெரும் மனவேதனையும் அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தேவர் மகன் திரைப்படம் வெளிவந்தபோது சென்னை உதயம் திரையரங்கத்தில் வாசலில் அறிவுமதியால் தனக்கு மாரிமுத்து அறிமுகப்படுத்தப்பட்டதாக கூறியுள்ள சீமான், முதன் முதலாக மாரிமுத்துவை சந்தித்த அந்த இரவில், தேவர் மகன் திரைப்படம் தங்கள் இருவருக்குள்ளும் ஏற்படுத்திய தாக்கம் குறித்து கோடம்பாக்கம் வரை விடிய விடிய பேசி நடந்த அந்த நினைவுகள் இன்றும் பசுமையாக தன் நெஞ்சில் நிழலாடுவதாக தெரிவித்துள்ளார்.
தான் இயக்கிய முதல் படமான பாஞ்சாலங்குறிச்சியில் மாரிமுத்து உதவி இயக்குநராக பணியாற்றினார் என்றும் அவர் தீவிரமான இலக்கிய வாசிப்பாளர் என்றும் குறிப்பட்டுள்ள சீமான், ஓவியம் தீட்டுவதுபோல் மிக அழகாக எழுதக்கூடிய திறமைப் பெற்றவர் மாரிமுத்து என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் மாரிமுத்து நடிப்பின் மீதும் தீராக்காதல் கொண்டவர் என்றும் நடிப்பில் அவருக்கே உரித்தான கம்பீரமான உடல்மொழியும், மதுரை வட்டார வழக்கும் அவருக்கென்று தனித்த அடையாளத்தைப் பெற்று தந்தது என்றும் சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் இளமைக்காலத்தில் கிடைக்கப்பெறாத வாய்ப்புகளை எல்லாம் தனது விடா முயற்சியின் மூலமும் 50 வயதுகளுக்கு பிறகு பெற்று, சின்னத்திரை, வெள்ளித்திரை என்று அடுத்தடுத்து வந்த வாய்ப்புகளை தவறவிடாது அதற்கென இரவுபகலாக கடும் உழைப்பினை செலுத்தினார் என்றும் சீமான் நினைவு கூர்ந்துள்ளார்.
அவரது அசாத்தியமான உழைப்பு கலையின் மீதான அவர் கொண்டிருந்த ஈடுபாட்டிற்கான சான்றானபோதும், உடல்நலத்தை கவனிக்காத உழைப்பு அவருடைய உயிரையே பறித்துவிட்டதைத்தான் ஏற்க முடியவில்லை என்றும் சீமான் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். அவருடைய திரைக்கலை ஆற்றலை முழுவதுமாக பயன்படுத்த முடியாமல் போனது தமிழ் கலைத்துறைக்கு மிகப்பெரிய இழப்பு என்றும் தெரிவித்துள்ளார்.
எதிர்நீச்சல் தொடரில் ஆதிகுணசேகரனாகவே வாழ்ந்து தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் சென்று சேர்ந்த அவருடைய புகழ் உச்சத்திற்கு சென்றுகொண்டிருந்த காலகட்டத்தில், அப்பா மணிவண்ணன் போல மென்மேலும் மிளிர்வார் என்று எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் அவருடைய திடீர் மறைவு தாங்க முடியாத துயரத்தை அளளிப்பதாகவும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
தான் அரசியல்துறைக்கு வந்துவிட்ட பிறகும், பல நேர்காணல்களில் தன்மீதான பேரன்பினை எவ்வித தயக்கமுமின்றி வெளிப்படுத்திய அவரது மறைவு தனிப்பட்ட முறையில் தனக்கு ஏற்பட்ட பேரிழப்பு என்றும் சீமான் உருக்கமாக தெரிவித்துள்ளார்.