கோலார் தங்கயவல்
கோலார் மாவட்டம் தங்கவயல் சீனிவாஸ்பூர் தாலுகா தாடிகொள் கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத். இவரது மனைவி வெங்கடம்மா. இத்தம்பதியின் மகன் லகரி (வயது 2). நேற்று முன்தினம் மாலை லகரி பாட்டியின் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தான்.
அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று லகரி மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த லகரி உயிருக்காக போராடி கொண்டிருந்தான். இதை பார்த்த கார் டிரைவர் வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
இந்தநிலையில் விபத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சிறுவன் லகரியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயற்சித்தனர். ஆனால் அதற்குள் சிறுவன் உயிரிழந்துவிட்டான்.
இதுகுறித்து சீனிவாஸ்பூர் புறநகர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கார் டிரைவரை தேடி வருகின்றனர்.