'டீன்ஏஜ்' வயதில் கிராண்ட்லாம் பட்டம்: கோகோ காப் சாதனை.!

நியூயார்க்,

அமெரிக்க ஓபன்

‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் 2-ம் நிலை வீராங்கனையும், ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனுமான அரினா சபலென்கா (பெலாரஸ்), 6-ம் நிலை இளம் புயல் கோகோ காப்புடன் (அமெரிக்கா) மோதினார்.

முதல் செட்டில் ஆதிக்கம் செலுத்திய சபலென்கா எதிராளியின் 3 சர்வீஸ்களை முறியடித்ததுடன் அந்த செட்டையும் வசப்படுத்தினார். உள்ளூர் ரசிகர்களின் உற்சாக குரல், அமோக ஆதரவுடன் ஆக்ரோஷமாக மட்டையை சுழற்றிய கோகோ காப் சரிவில் இருந்து எழுச்சி பெற்று அடுத்த செட்டில் பதிலடி கொடுத்தார். கடைசி செட்டிலும் கோகோ காப்பின் கை முழுமையாக ஓங்கியது. ஒரு கட்டத்தில் பதற்றத்திற்குள்ளான சபலென்கா பந்தை வலுவாக வெளியே அடித்து புள்ளிகளை தாரைவார்க்கும் தவறுகளை அதிகமாக (46 முறை) செய்தார். இவை எல்லாம் கோகோ காப்புக்கு சாதகமாக மாறியது.

கோகோ காப் ‘சாம்பியன்’

2 மணி 6 நிமிடங்கள் நீடித்த பரபரப்பான ஆட்டத்தின் முடிவில் கோகோ காப் 2-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் சபலென்காவை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். அவர் தொடர்ச்சியாக ருசித்த 12-வது வெற்றி இதுவாகும். அவர் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை உச்சிமுகர்வது இதுவே முதல் முறையாகும்.

மேலும் 21-ம் நூற்றாண்டில் ‘டீன்ஏஜ்’ வயதில் கிராண்ட்லாம் பட்டத்தை வென்ற முதல் அமெரிக்க வீராங்கனை என்ற சிறப்பையும் 19 வயதான கோகோ காப் பெற்றார். இதற்கு முன்பு 1999-ம் ஆண்டு அமெரிக்க ஓபனை அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் தனது 17-வது வயதில் வென்று இருந்ததே சாதனையாக இருந்தது.

வாகை சூடியதும் உணர்ச்சி மிகுதியால் ஆனந்த கண்ணீர் விட்ட கோகோ காப் கூறுகையில், ‘கோப்பையை வென்றது எனக்கே கொஞ்சம் இன்ப அதிர்ச்சியாக உள்ளது. மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லை. 2022-ம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் இறுதி ஆட்டத்தில் தோற்ற போது இதயமே நொறுங்கிப்போனது. ஆனால் சோதனைகளையும், சவால்களையும் கடந்து நான் நினைத்ததை விட இனிமையான ஒரு தருணத்தை கடவுள் தந்துள்ளதாக உணர்கிறேன். ஆட்டம் முடிந்ததும் எனது பெற்றோரை கட்டித்தழுவி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டேன். அப்போது எனது தந்தையின் அழுகுரல் கேட்டது. அவர் அழுததை இதற்கு முன்பு பார்த்ததில்லை. இந்த தருணத்தை ஒரு போதும் மறக்கமாட்டேன். எல்லா காலத்திலும் உலகின் சிறந்த வீராங்கனையாக இருக்க வேண்டும் என்பதே எனது லட்சியம்’ என்றார்.

ரூ.24¾ கோடி பரிசு

இந்த வெற்றியின் மூலம் கோகோ காப் ரூ.24¾ கோடியை பரிசாக அள்ளினார். அத்துடன் இன்று வெளியாகும் புதிய தரவரிசைப்பட்டியலில் 6-ல் இருந்து 3-வது இடத்துக்கு முன்னேறுகிறார். அவரது சிறந்த தரநிலை இதுவாகும். மேலும் இரட்டையர் தரவரிசையில் சக நாட்டவர் ஜெசிகா பெகுலாவுடன் இணைந்து முதலிடத்தை பிடிக்கிறார்.

ரூ.12½ கோடி பரிசாக பெற்ற சபலென்கா ஒற்றையர் தரவரிசையில் மேலும் ஒரு இடம் உயர்ந்து முதல்முறையாக ‘நம்பர் ஒன்’ அரியணையில் ஏறுகிறார்.

25 வயதான சபலென்கா கூறுகையில், ‘உலகின் நம்பர் ஒன் இடத்தை பிடிப்பது மிகப்பெரிய முன்னேற்றம். சிறந்த சாதனை. ஆண்டின் இறுதி வரை ‘நம்பர் ஒன்’ இடத்தை தக்க வைத்துக்கொள்ள விரும்புகிறேன். அதுவே இன்னும் நன்றாக செயல்பட உத்வேகம் அளிக்கும்’ என்று குறிப்பிட்டார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.