![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/1694404632_NTLRG_20230910125027290369.jpg)
லியோ – அதிகாலைக் காட்சிகளுக்கு அனுமதி கிடைக்குமா?
தமிழ் சினிமா உலகில் கடந்த சில வருடங்களாக முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கு, வெளியாகும் முதல் நாளில் அதிகாலைக் காட்சிகள், நடு இரவுக் காட்சிகள் ஆகியவற்றிற்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், இந்த வருடப் பொங்கலை முன்னிட்டு வெளிவந்த 'வாரிசு, துணிவு' ஆகிய படங்களுக்கு அரசு அனுமதி இல்லாமல் அதிகாலைக் காட்சிகளை நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதோடு, 'துணிவு' படத்தின் அதிகாலைக் காட்சிக் கொண்டாட்டத்தின் போது அஜித் ரசிகர் ஒருவர் லாரி மீதிருந்து கீழே விழுந்து அகால மரணமடைந்தார். அந்த மரணம் கடும் சோகத்தை ஏற்படுத்தியதோடு சர்ச்சைகளையும் உருவாக்கியது. இப்படி அதிகாலைக் காட்சிகள் நடத்துவதால்தான் தேவையற்ற விபரீதங்கள் நடக்கிறது என சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்தனர்.
அதன்பின் இந்த வருடத்தில் இதுவரையில் எந்த ஒரு படத்திற்கும் அதிகாலைக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கவில்லை. தமிழக அமைச்சராய் இருக்கும் உதயநிதி நடித்து வெளிவந்த 'மாமன்னன்' படத்திற்கும், ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த 'ஜெயிலர்' படத்திற்கும் கூட அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி தரப்படவில்லை.
இதனிடையே, விஜய் நடித்து அடுத்த மாதம் வெளிவர உள்ள 'லியோ' படத்திற்கு அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என மல்டிபிளக்ஸ் மற்றும் திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவரான திருப்பூர் சுப்பிரமணியம் சொன்னதாக செய்திகள் வெளியாகி உள்ளன. சமூக வலைத்தளங்களிலும் இது குறித்து விஜய் ரசிகர்களை வைத்து பதிவுகளைப் பரப்பி வருகின்றனர்.
உதயநிதி, ரஜினி படங்களுக்கே அனுமதி வழங்காத அரசு, விஜய் படத்திற்கு மட்டும் எப்படி அனுமதி வழங்கும் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. இதனால், 'லியோ' படத்திற்கு அதிகாலைக் காட்சிகளுக்கு அனுமதி கிடைக்காது என்றே திரையுலகத்தில் சொல்கிறார்கள்.