ஆந்திர மாநிலத்தில் புதிய ஐ.டி நிறுவனங்கள் அமைக்க அனுமதி கொடுப்பதற்குச் சட்டவிரோதமாக ரூ.118 கோடி பெற்றதாக ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சனிக்கிழமை காலை 6 மணியளவில் குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, நேற்று காலை விஜயவாடா ஊழல் தடுப்புப் பிரிவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் சந்திரபாபு நாயுடு.
நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு தரப்பு வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா, “அரசியல் ஆதாயங்களுக்காக முன்னாள் முதல்வர் பொய்யாகச் சிக்கவைக்கப்பட்டிருக்கிறார். ஊழல் தடுப்புச் சட்டத்தின் சட்டபூர்வ விதிகளின்கீழ் ஆதாரபூர்வமான எந்தக் குற்றச்சாட்டுகளும் இல்லை. சந்திரபாபு நாயுடு கைதில் சட்ட விதிமீறல் இருக்கிறது” என வாதிட்டிருக்கிறார். அதே நேரம் காவல்துறை தரப்பு, “முன்னாள் முதல்வர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை” என நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.
இதையடுத்து, ஜாமீன் கோரி சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, 14 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க விஜயவாடா ஊழல் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. வரும் 22-ம் தேதி வரை ராஜமுந்திரி சிறையில் சந்திரபாபு நாயுடு அடைக்கப்படுவார் என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது. ஆனாலும், உடல் நிலையை காரணம் காட்டி ஒரு மனுவும், வீட்டிலேயே இருப்பதாக ஒரு மனுவும் என இரண்டு மனுக்கள் சந்திரபாபு நாயுடு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், முதற்கட்ட ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், அவர் சிறை செல்வது உறுதியாகியிருக்கிறது. இந்த நிலையில், சந்திரபாபு நாயுடுவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு, ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுடன் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இதற்கிடையே, சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆந்திர மாநிலத்தில் இன்று முழு அடைப்பிற்கு தெலுங்கு தேசம் கட்சியினர் அழைப்பு விடுத்திருக்கின்றனர். இதனால், மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அசம்பாவிதங்களை தவிர்க்க மாநிலம் முழுவதும் காவல்துறை பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். சந்திரபாபு நாயுடு கைதால் ஆந்திராவில் கொந்தளிப்பான சூழல் நிலவுகிறது.