செல்வராகனுக்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகு பதிலளித்த த்ரிஷா
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். அவரது இயக்கத்தில் தெலுங்கில் 2007ல் வெளிவந்த படம் 'ஆடவாரி மாடலருக்கு அர்தாலே வேறுலே'. வெங்கடேஷ், த்ரிஷா மற்றும் பலர் நடித்த படம். இப்படம்தான் பின்னர் தனுஷ், நயன்தாரா நடிக்க தமிழில் 'யாரடி நீ மோகினி' என்ற பெயரில் ரீமேக் ஆகி வெளிவந்தது.
அப்படம் பற்றி 2013ம் ஆண்டு செல்வராகவன் ஒரு டுவீட் போட்டிருந்தார். அதில், “'ஆடவாரி மாடலருக்கு அர்தாலே வேறுலே' படத்தை நீண்ட இடைவெளிக்குப் பிறகு பார்த்தேன். வெங்கடேஷ், த்ரிஷா ஆகியோருடன் வேலை பார்த்தது சிறப்பானது. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கத் தயார்,” என அப்போது குறிப்பிட்டுள்ளார்.
அந்த டுவீட்டுக்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகு “நான் ரெடி, செல்வராகவன்” என பதிலளித்துள்ளார் த்ரிஷா. டுவிட்டர் தளத்தில் இவ்வளவு இடைவெளிக்குப் பிறகு ஒருவர் பதிலளித்த டுவீட் இதுவாகத்தான் இருக்கும். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு த்ரிஷாவின் இந்தப் பதிலுக்குப் பலரும் ஆச்சரியம் தெரிவித்துள்ளார்கள்.