சென்னை: “தமிழகத்தில் கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக டெங்கு என்பது கட்டுக்குள் இருந்து வருகிறது. இந்த ஆண்டும் கூட மிகப் பெரிய அளவில் கட்டுக்குள்தான் இருந்து வருகிறது. கடந்த ஜனவரி 1-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 10-ம் தேதி வரை 3 பேர் டெங்குவால் இறந்துள்ளனர்” என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு ரூ.1.50 கோடி மதிப்பில் பார்வையாளர்கள் தங்குமிடம் கட்டடம் கட்டுவதற்கான இடத்துக்கான ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “மதுரவாயல் பகுதியில் 4 வயது சிறுவன் டெங்கு பாதிப்பால் மரணம் அடைந்திருக்கிறார். கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக, டெங்கு என்பது கட்டுக்குள் இருந்து வருகிறது. இந்த ஆண்டும் கூட மிகப் பெரிய அளவில் கட்டுக்குள்தான் இருந்து வருகிறது.
இருப்பினும், நேற்று வரை டெங்கு பாதிப்புக்குள்ளாகி, மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 253 பேர். இந்த 253-ல், கடந்த ஜனவரி 1ம் தேதி தொடங்கி செப்டம்பர் 10-ம் தேதி வர் 3 பேர் டெங்குவால் இறந்துள்ளனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை, மருத்துவமனைகளில் மாதிரிகள் எடுத்து பரிசோதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 12 ஆயிரத்து 121 பேர். தமிழகம் முழுவதும் டெங்கு கொசு ஒழிப்பில் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும் என்ற வகையிலும், இறப்பு இல்லாத நிலையை தமிழகத்துக்கு கொண்டு வர வேண்டும் என்ற அடிப்படையிலும், நாளை தலைமைச் செயலாளர் தலைமையில் உயர் அலுவலர்களுக்கான கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது” என்று அவர் கூறினார்.
டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுவன் உயிரிழப்பு: சென்னை மதுரவாயல் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி சோனியா. இவர்களின் 4 வயது மகன் ரக்ஷன். அப்பகுதியில் உள்ள பள்ளியில் மழலையர் வகுப்பு படித்து வந்தார். கடந்த வாரம் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. காய்ச்சல் குறையாததால், கடந்த 6-ம் தேதி சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிறுவன் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், டெங்கு காய்ச்சலின் தீவிர பாதிப்பால் நேற்று முன்தினம் இரவு சிறுவன் உயிரிழந்தார். டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் உயிரிழந்திருப்பது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மதுரவாயல் பகுதியில் சுகாதாரப் பணிகள் சரியாக நடைபெறாததே சிறுவன் உயிரிழக்க காரணமென்று பெற்றோர், அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். சுகாதார அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி சிறுவனின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் மதுரவாயல் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டதால் போலீஸார் குவிக்கப்பட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, போராட்டத்தை அவர்கள் கைவிட்டனர். அப்பகுதிக்கு வந்த சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ்களை வீட்டின் கதவுகளில் ஒட்டினர். அப்பகுதி மக்கள் கூறுகையில், “இந்த பகுதியில் 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அதனால், குடிநீர் தொட்டிகளில் தண்ணீரை சேமித்து வைத்து பயன்படுத்தி வருகிறோம். கடந்த சில தினங்களாக பெய்த மழையால் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதுவே டெங்கு காய்ச்சல் பரவ காரணமாக உள்ளது” என்றனர்.