பெங்களூரு, : ஆயுதப்படை போலீஸ் தேர்வில், முறைகேட்டில் ஈடுபட திட்டமிட்ட நான்கு பேரை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
கல்யாண கர்நாடகா மண்டல ஆயுதப்படையில் காலியாக இருக்கும் 400 போலீஸ் பணியிடங்களை நிரப்ப நேற்று தேர்வு நடந்தது.
இந்த தேர்வை எழுத இருந்த தேர்வர்கள் சிலர், முறைகேடு செய்து தேர்வு எழுதி வெற்றி பெறும் நோக்கில், ஒரு கும்பலிடம் பணம் கொடுத்து உள்ளனர்.
இந்த பணத்தை வாங்கிய கும்பல், தேர்வு வினாத்தாளை தேர்வர்களிடம் கொடுத்து, தேர்வில் முறைகேடு செய்ய திட்டமிட்டு இருப்பதாக, பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்படி, கொப்பாலின் குஷ்டகியை சேர்ந்த பசவராஜ், துமகூரின் சிக்கநாயக்கனஹள்ளியின் ஹரிபிரசாத், திலீப், திம்மேகவுடா ஆகிய நான்கு பேரை, நேற்று முன்தினம் இரவு மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் பணம் கொடுத்த தேர்வர்களை, பெங்களூரில் இருந்து தேர்வு மையங்களுக்கு பஸ்சில் அழைத்து செல்ல திட்டமிட்டு இருந்ததும், தேர்வு முறைகேட்டில் ஈடுபட திட்டம் வகுத்திருந்ததும் தெரியவந்தது. இவர்களிடம் பணம் கொடுத்த தேர்வர்கள் யார் என்று விசாரணை நடக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement