புதுடெல்லி: இந்தியாவின் மிக முக்கிய நட்பு நாடாக சவுதி அரேபியா திகழ்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் இன்று பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “இளவரசர் முகம்மது பின் சல்மானும் நானும் மிகவும் பயனுள்ள பேச்சுவார்த்தையை நடத்தினோம். இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவை மதிப்பாய்வு செய்தோம். வரும் காலங்களில் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக தொடர்புகள் மேலும் அதிகரிக்கும் என்று நம்புகிறோம்.
கிரிட் இணைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உணவுப் பாதுகாப்பு, செமிகண்டக்டர்கள், விநியோகச் சங்கிலி ஆகியவற்றில் இருநாடுகளுக்கும் இடையே மகத்தான ஒத்துழைப்புக்கு வாய்ப்புள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான கூட்டாண்மையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு ஏற்ப பல்வேறு முயற்சிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.
முன்னதாக, அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள சவுதி இளவரசருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இளவரசர், “இந்தியாவில் இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஜி20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய இந்தியாவுக்கு எனது வாழ்த்துகள். உச்சி மாநாட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் உலகிற்கு நன்மை பயக்கும். இரு நாடுகளுக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க நாங்கள் ஒன்றாக வேலை செய்கிறோம்” என்று கூறினார்.