'800' கிரிக்கெட் படம் அல்ல, என் வாழ்க்கை போராட்டம் : முத்தையா முரளிதரன்

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக இருந்தவர் முத்தையா முரளிதரன். இவர் தமிழர். சர்வதேச கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். தற்போது இவரது வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து '800' என்ற படம் தயாராகி உள்ளது. இந்த படத்தில் விஜய்சேதுபதி, முத்தையா முரளிதரன் கேரக்டரில் நடிப்பதாக இருந்தது. இதற்காக போட்டோ ஷூட்டும் நடத்தப்பட்டது. ஆனால் முத்தையா முரளிதரன் தமிழர்களுக்கு எதிரானவர் என்று கூறி சில அமைப்புகள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே விஜய்சேதுபதி படத்தில் இருந்து விலகிக் கொண்டார். தற்போது அவருக்கு பதிலாக 'ஸ்லம்டாக் மில்லியனர்' புகழ் மதுர் மிட்டல் நடித்துள்ளார். அவரது மனைவியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார்.

படத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முத்தையா முரளிதரன் பேசியதாவது : இயக்குநர் வெங்கட்பிரபு, இயக்குநர் ஸ்ரீபதி என நாங்கள் எல்லாம் சேர்ந்து ஒரு மன்றம் அமைத்தோம். என் கஷ்டத்தின் போது உதவி செய்த என் நாட்டு மக்களுக்கு திரும்ப நல்லது செய்ய வேண்டும் என இதை ஆரம்பித்தோம். சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு, ஆயிரம் மாணவர்களைப் படிக்க வைப்பது என பல விஷயங்களை செய்து வருகிறோம். வெங்கட்பிரபுவும் என் மனைவியும் சிறு வயதில் நண்பர்கள். அவர்கள் சந்தித்து பேசினார்கள். வெங்கட்பிரபு பேசிக் கொண்டிருக்கும் போது, என்னைப் பற்றி பயோபிக் எடுக்கலாம் என்று சொன்னார். இந்தப் படம் மூலம் வரும் பணம் டிரஸ்ட்டுக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று என் மேனேஜர் ஆலோசனை சொன்னார்.

என்னைப் பற்றி நன்றாக ஆராய்ந்து தான் இயக்குநர் ஸ்ரீபதி கதை எழுதியுள்ளார். வெங்கட்பிரபு தான் முதலில் இயக்குவதாக இருந்தது. ஆனால், அவருக்கும் தயாரிப்பாளருக்கும் பிரச்சினை என்பதால் விலகி விட்டார். ஸ்ரீபதியை நான் இயக்க சொன்னேன். பின்பு விஜய்சேதுபதி வந்தார். ஆனால், அதிலும் பிரச்சினை வந்தது. நாங்கள் மலையகத் தமிழர்கள் வம்சாவளியில் வந்தோம். எங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு பல தடைகள் வந்தது. படத்திற்கும் அப்படியான தடைகள் இருந்தது. ஆனால், இலங்கை அரசு படத்தைப் பற்றிப் புரிந்து கொண்டு ஒத்துழைப்புக் கொடுத்தது. வெறும் கிரிக்கெட் படமாக இல்லாமல். நான் சாதனை படைத்ததற்கு பின்னால் இருந்தது என்ன, என்ன பிரச்சினைகளோடு போராடினேன், என்னால் நாடு எந்த நிலைக்கு வந்தது என்பது குறித்து இந்தப் படத்தில் பேசியுள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.