நமக்குள்ளே… காலை உணவுத் திட்டம்… நாளைய தலைமுறைக்கான முதலீடு!

நாட்டிலேயே முதல் மாநிலமாக, அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டத்தை மாநிலம் முழுக்க விரிவாக்கம் செய்துள்ளது மு.க.ஸ்டாலின் தலைமையிலான தற்போதைய தமிழக அரசு. சின்னஞ்சிறு வயிறுகளின் பசியாற்றும் இத்திட்டத்துக்கு பெற்றோர், செயற்பாட்டாளர்கள், ஆசிரியர்கள், குழந்தைகள் என அனைவரிடமும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் மூலம் 31,000 அரசுப் பள்ளிகளில் பயிலும் சுமார் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகிறார்கள்.

2022-23 மாநில பட்ஜெட்டில், பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்துக்காக ரூ. 500 கோடி ஒதுக்கப்பட்டது. உண்மையில் இந்தத் தொகை, எதிர்கால மனிதவளத்துக்கான, மாநில முன்னேற்றத்துக்கான முதலீடு. தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களின் வளர்ச்சி தேசிய அளவில் முன்னணியில் இருப்பதற்கான மிக அடிப்படை காரணம்… கல்வியறிவு. அவ்வகையில், மாணவர்களை பள்ளிக்கு வரவைக்கவும், இடைநிற்றலை குறைக்கவும் இப்போது இன்னும் தீர்க்கமான பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறது இத்திட்டம்.

நமக்குள்ளே

பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டத்துக்கும், தமிழகமே இந்தியாவுக்கு முன்னோடி. 1955-ம் ஆண்டு காமராஜர் ஆட்சிக் காலத்தில் மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. பின்னர் அது அடுத்தடுத்த ஆட்சிகளில் சத்துணவு, முட்டை, கலவை சாதம் என்று ஊட்டச்சத்துக்களால் செறிவூட்டப்பட்டது. நாம் தொடங்கி கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் கழித்துதான், தேசிய மதிய உணவுத் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. 2001-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம், `இந்தியாவின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒவ்வொரு குழந்தைக்கும் மதிய உணவு வழங்கப்பட வேண்டும்’ என்று உத்தரவிட்டது. 100 மில்லியன் குழந்தைகள் பயன்பெறும் நம் தேசிய உணவுத் திட்டமானது, பள்ளி மாணவர்களுக்கு உணவளிக்கும் உலகின் மிகப்பெரிய திட்டம்.

2022-க்கான உலகளாவிய பசி குறியீட்டில் 121 நாடுகளில் இந்தியாவுக்கு 107-வது இடம். சமீபத்திய தேசிய குடும்ப நல சர்வே, 35.5% குழந்தைகள் வளர்ச்சி குன்றி யுள்ளார்கள் என்கிறது. நாட்டில் பள்ளி இடைநிற்றல், குறிப்பாக பெண் குழந்தைகளிடம் அதிகம் காணப்படுகிறது. இவையெல்லாம், குழந்தைகளுக்கான உணவு மேலாண்மையை சிறப்பாக்கும் சமூக நலத் திட்டங்களின் தேவையைச் சொல்கின்றன.

இதுபோன்ற சூழலில் அமல்படுத்தப்பட்டிருக்கும் பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டம், சிறப்பான தொடக்கம். ஊழல், நிர்வாகக் குறைபாடு என இதில் களையப்பட வேண்டிய தவறுகளுக்கு அரசு கண்டிப்புடன் கவனம் கொடுக்க வேண்டியதும் அவசியம். ‘காலையில கூலி வேலைக்குப் போற அவசரத்துல, புள்ளைங் களுக்கு எதை பொங்கி என்ன கொடுத்து ஸ்கூலுக்கு அனுப்புறதுனு மனசை பிசையும். இப்போ நிம்மதியா கைகாட்டி அனுப்பிவைக்கிறேன்’ எனும் பல அம்மாக்களின் குரல்களும் வந்துசேர்கின்றன.

கல்வி, ஆரோக்கியம், குடும்பம் உள்ளிட்ட அனைத்தையும் உள்ளடக்கிய சமூக நலத்திட்டங்கள் தொடர, துணை நிற்போம் தோழிகளே!

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்

அவள் விருதுகள்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.