கெய்ரோ, மத்திய தரைக்கடல் பகுதியில் வீசிய, ‘டேனியல்’ புயலால் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்துக்கு லிபியாவில் 2.000 பேர் பலியானதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
வட ஆப்ரிக்க நாடான லிபியாவின் கிழக்கு பகுதியில் மத்திய தரைக்கடலை, சக்திவாய்ந்த புயல் ஒன்று நேற்று முன்தினம் தாக்கியது.
‘டேனியல்’ என பெயரிடப்பட்ட இந்த புயலால், லிபியாவின் கடற்கரை நகரங்களில் கடுமையான சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்தது.
பாய்தா, சூசா, டெர்னா, ஷாஹத், மார்ஜ் உள்ளிட்ட நகரங்கள் புயலின் கோரப்பிடியில் சிக்கி சின்னாபின்னமாகின. அனைத்து இடங்களிலும் தண்ணீர் புகுந்ததை அடுத்து, முக்கிய நீர்நிலைகளில் இருந்து வெளியேறிய வெள்ளம், லிபியாவின் கிழக்கு பகுதியை வெள்ளக்காடாக்கியது.
வீடுகள், வாகனங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதால், தங்க வழியின்றி தவித்த மக்களை அந்நாட்டு பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்டு வருகின்றனர்.
இந்த கோரப் புயல், டெர்னா நகரை புரட்டிப் போட்டதை அடுத்து, அங்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கிய அந்த நகரின் பெரும்பாலான பகுதிகள் அழிந்தன.
கொடூர தாக்குதலுக்கு உள்ளான டெர்னா நகர் பேரழிவு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாட்களாக பெய்த மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை, 2,000 பேர் பலியானதாக அந்நாட்டு பிரதமர் ஒசாமா ஹமத் தெரிவித்துள்ளார்.
ஆயிரக்கணக்கானோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
முக்கிய நகரங்களில் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கி மாயமானவர்களை தேடும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்