புதுடெல்லி: தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது என்று சோஹோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், இணை நிறுவனருமான ஸ்ரீதர் வேம்பு நேற்று கருத்து தெரிவித்துள்ளார்.
பொதுவாக அரசியல்வாதிகளின் கைதுகளுக்கு தொழிலதிபர்கள் கருத்து தெரிவிப்பது என்பது மிகவும் அரிதான நிகழ்வு. இந்த நிலையில், சந்திரபாபு கைதுக்கு ஸ்ரீதர் வேம்பு அதிர்ச்சி தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் மட்டுமின்றி நிறுவன உலகிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஸ்ரீதர் வேம்பு வெளியிட்ட எக்ஸ் (முன்பு ட்விட்டர்) பதிவில் கூறியுள்ளதாவது: சந்திரபாபு நாயுடு அவர்கள் கைது செய்யப்பட்டதை அறிந்து மிகவும் அதிர்ச்சியடைந்தேன். எனக்கு அவரை நன்கு தெரியும். அவர் சோஹோ உட்பட பல நிறுவனங்களை ஆந்திராவிற்கு கொண்டு வருவதற்கு கடுமையாக உழைத்தார். நீதி வெல்லும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு சனிக்கிழமை நந்தியால் மாவட்டத்தில் பிரச்சாரத்தின்போது கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் ஹெலிகாப்டர் மூலம் விஜயவாடாவுக்கு கொண்டு செல்லப்பட்டு ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ரூ.371 கோடி அளவிலான நிதி முறைகேட்டில் சந்திரபாபு நாயுடு முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு அவரிடம் சிஐடி விசாரணை நடத்தி வருகிறது. இன்று அதிகாலை அவர் ராஜமுந்திரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.