Marakkuma Nenjam Concert: "ஒரு சக இசையமைப்பாளராக…" – ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவு குரல் கொடுத்த யுவன்!

நேற்று முழுவதும் முக்கிய பேசுபொருளாக இருந்தது சென்னையில் நடந்த ஏ.ஆர்.ரஹ்மானின் `மறக்குமா நெஞ்சம்’ கான்சர்ட்தான். முறையான ஏற்பாடுகள் இல்லாததால் பெருமளவில் ரசிகர்கள், சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் எனப் பலரும் பாதிக்கப்பட்டிருந்தனர். பலரும் ஏ.ஆர்.ரஹ்மானையும் விழா ஏற்பாட்டாளர்களையும் குற்றம்சாட்டி வந்த நிலையில் அவருக்குத் துணை நிற்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் யுவன் சங்கர் ராஜா.

“இவ்வளவு பெரிய நிகழ்வை ஒழுங்காக நடத்துவது என்பது மிகவும் சிக்கலான பணியாகும். தேவையான உபகரணங்களை ஏற்றி இறக்குவது தொடங்கிக் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது, போக்குவரத்தைக் கண்காணிப்பது எனப் பல சவால்களை உள்ளடக்கியது. கூட்டநெரிசல் போன்ற இன்னல்கள் துரதிர்ஷ்டவசமாக இதுபோன்ற இத்தனை பெரிய நிகழ்வுகளில் நிகழ்வதுண்டு. நிர்வாகத் தவறுகள் இதற்குக் காரணமாக இருந்திருக்கின்றன. நல்ல நோக்கத்தில், பெரிய அளவில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டபோதும் இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்துவிடுகின்றன. எங்கள் இசையை அர்த்தமுள்ளதாக மாற்றும் எங்களது ரசிகர்களுக்கு பெரும் அவதியை அவை ஏற்படுத்திவிடுகின்றன.

Yuvan Shankar Raja Defends AR Rahman

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இந்தச் சம்பவத்தின் காரணங்களைக் கூராய்வு செய்து தவறுகளை களையவேண்டும். கலைஞர்களாகிய நாங்கள் மேடையில் இருக்கும்போது எல்லாமே சீராக நடக்கும் என்றும் எங்கள் ரசிகர்கள் நன்றாகக் கவனிக்கப்படுவார்கள் என்றும் விழா ஏற்பாட்டாளர்கள் மீது முழு நம்பிக்கை வைக்கிறோம். இதுபோன்ற ஒரு சூழலுக்கு ரசிகர்கள் தள்ளப்படுவதைக் காண்பது உண்மையிலேயே வருத்தமளிக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் கலைஞர்களாகிய எங்களை, இன்னும் ஒரு படி அதிகம் சென்று திட்டமிட வேண்டும் என்பதையும் பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் தீவிரப் பங்காற்ற வேண்டும் என்பதையும் எடுத்துரைக்கிறது.

Marakuma Nenjam Concert

ஒரு சக இசையமைப்பாளர் என்ற முறையில், இந்த துரதிர்ஷ்டவசமான சூழலில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக நிற்கிறேன். அவரது ரசிகர்களுக்குச் சிறப்பான மறக்கமுடியாத இரவாக அது அமைந்திருக்க வேண்டும். இதிலிருந்து பாடங்கள் கற்றுக் கொள்ளப்படவேண்டும். வருங்காலத்தில் மேம்படுத்த வேண்டும். எதிர்கால நிகழ்வுகளை ரசிகர்களின், குறிப்பாகப் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மிகவும் கவனமாகச் செயல்படுத்தப்பட வேண்டும்!” என அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார் யுவன்.

இந்தத் தவறுகளுக்கான முழு பொறுப்பையும் தானே எடுத்துக்கொள்வதாகக் கூறியிருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான், இதுபோன்ற இசை நிகழ்ச்சிகளை நடத்த உலகத்தரத்திலான உள்கட்டமைப்புகளை சென்னையில் அமைக்க அனைவரும் குரல்கொடுக்கவேண்டும் எனவும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.