உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான நியூசிலாந்து அணியில் கேப்டனாக நீடிக்கிறார் வில்லியம்சன்

ஆக்லாந்து,

நியூசிலாந்து அணியை அறிவித்த குடும்பத்தினர்

10 அணிகள் பங்கேற்கும் 13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் நடக்கிறது. ஆமதாபாத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் மோதுகின்றன.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதுவும் வித்தியாசமாக சம்பந்தப்பட்ட அவர்களது குடும்பத்தினர் வெளியிட்டனர். அதாவது அணிக்கு தேர்வாகியுள்ளதாக ஒவ்வொரு வீரரின் பெயர், அவரது ஒருநாள் போட்டி நம்பர் ஆகியவற்றை அவர்களது மனைவி, குழந்தைகள், பெற்றோர், பாட்டி உள்ளிட்டோர் உச்சரிக்கும் வீடியோவை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. அதில், எங்களது உலகக் கோப்பை அணி வீரர்களை அவர்களின் ‘நம்பர் ஒன்’ ரசிகர்கள் அறிமுகப்படுத்தியதாக பெருமையோடு குறிப்பிட்டுள்ளது.

கேப்டனாக வில்லியம்சன்

அணியின் கேப்டனாக கேன் வில்லியம்சன் நீடிக்கிறார். கடந்த மார்ச் 31-ந்தேதி ஐபிஎல் தொடக்க ஆட்டத்தில் பந்தை எல்லைக்கோட்டில் துள்ளி குதித்து தடுத்த போது கீழே விழுந்ததில் அவரது வலது கால் முட்டியில் பலத்த காயம் ஏற்பட்டது. காயத்துக்கு ஆபரேஷன் செய்து கொண்ட அவர் உலகக் கோப்பை போட்டியில் ஆடுவது சந்தேகம் தான் என்று கிரிக்கெட் வாரியம் கூறியது. ஆனாலும் நம்பிக்கை இழக்காத வில்லியம்சன் காயத்தில் இருந்து மீள்வதற்கான பயிற்சிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு இப்போது ஓரளவு மீண்டு விட்டார். அவரது உடல்தகுதியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. என்றாலும் கடந்த 6 மாதங்களாக எந்த போட்டிகளிலும் ஆடாத அவர் அனேகமாக உலகக் கோப்பையில் ஒருசில ஆட்டங்களை தவறவிடுவார் என்று தெரிகிறது. அவர் இல்லாத ஆட்டங்களில் அணியின் கேப்டனாக டாம் லாதம் செயல்படுவார்.

உலகக் கோப்பை போட்டிக்கான நியூசிலாந்து அணி வருமாறு:- கேன் வில்லியம்சன் (கேப்டன்), டிரென்ட் பவுல்ட், மார்க் சாப்மன், டிவான் கான்வே, லோக்கி பெர்குசன், மேட் ஹென்றி, டாம் லாதம், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னெர், சோதி, டிம் சவுதி, வில் யங்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.