'மாமன் மச்சான்னு பொறுப்பு கொடுக்க கூடாது' – மா.செ.க்களுக்கு பாடமெடுத்த எடப்பாடி!

மதுரையில் கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி நடைபெற்ற ‘வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு’ தொடர்பாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் செப்டம்பர் 4-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உடல்நலன் காரணமாக செப்டம்பர் 10-ம் தேதிக்கு ஆலோசனை கூட்டம் மாற்றி வைக்கப்பட்டது. அதன்படி, செப்.10-ம் தேதி காலை 9.30 மணிக்கு மதுரை மாநாடு குழுவினருடன் ஆலோசனை மேற்கொண்டார் எடப்பாடி.

மதுரை மாநாடு

இந்த ஆலோசனைக் கூட்டம் பிற்பகல் 1.30 மணிவரை நீடித்தது. அதில் சிறப்பாக பங்காற்றிய நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதில் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக அ.தி.மு.க நிர்வாகிகள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து மா.செ.க்களுக்கு பாடமெடுத்து இருக்கிறார் எடப்பாடி.

இதுதொடர்பாக சீனியர் மாவட்ட செயலாளர்களிடம் பேசினோம். “அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக எடப்பாடி பொறுப்பேற்ற பின்னர், மாதம் ஒரு முறை மா.செ.க்கள் கூட்டம் நடத்துவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். அதன்படி, செப்.10-ல் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எப்போதும் இல்லாதளவுக்கு  பதற்றம் இருந்தது. அதற்கு காரணமும் இருக்கிறது. ஏனென்றால், இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மா.செ.வை நியமிக்கலாம் என்று பேச்சு தலைமை கழகத்துக்குள் இருக்கிறது.

அதிமுக ஆலோசனை கூட்டம்

இந்நிலையில் மா.செ.க்கள் கூட்டத்தை எடப்பாடி கூட்டிருந்ததால்தான் பதற்றத்துக்கு காரணம். அதன்படி, நாடாளுமன்றத் தேர்தல் குறித்து தனது பேச்சைத் தொடர்ந்தார் எடப்பாடி. அவர்பேசும்போது, ‘நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் முழுமையாக ஓராண்டு கூட இல்லை. நான் கிளை கழக செயலாளராக பணியாற்றி இருக்கிறேன். எல்லா தேர்தலுக்கும் அடிப்படை பூத் கமிட்டிதான். இதுகுறித்து கடந்த மார்ச் மாதமே கூறியிருந்தேன். ஒருசிலரை தவிர அதில் யாருமே கவனம் செலுத்தியதாக தெரியவில்லை. இனி நீங்கள் இப்படியே இருந்தால் அது உங்களுக்கும் கட்சிக்கும் நல்லதல்ல.

தலைமையிடமிருந்து உத்தரவு வந்தவிட்டதென, சும்மா ஆட்களை போடாதீர்கள்.  ‘ஒரு ஊருக்குள் ஒரு தரப்பை போடும் தவறு பல ஆண்டுகளாக நடக்குதுன்னு எனக்கு நல்லாவே தெரியும். ஒரு பூத் கமிட்டிக்கு 20 நபர்கள் வீதம், 50 ஓட்டுக்கு ஒரு ஆள் கட்டாயம் இருக்க வேண்டும். அவர்களோடு மகளிர் அணியைச் சேர்ந்த 25 பேரும், இளைஞர் பாசறையில் இருந்து 25 பேரும் இடம் பெற வேண்டும். பேரூர், நகராட்சிக்கு பூத் செயலாளர் நியமிக்க வேண்டும். லிஸ்ட்டை அந்தந்த ஒன்றிய நகர பேரூர் கழகச் செயலாளர்களிடம் நேரடியாக கேட்டு வாங்க வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி

மா.செ.க்கள் அந்த லிஸ்ட்டை சரிபார்த்து தலைமைக் கழகத்துக்கு அனுப்பவேண்டும். இந்த விஷயத்தில் மா.செ.க்களை தலைமைக் கழக நிர்வாகிகள் நேரடியாக பார்வையிடுவார்கள். பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை அக்டோபர் 5-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்பு காலியாக உள்ள அனைத்து பொறுப்புகளுக்கும் நிர்வாகிகளை நியமிக்க வேண்டும். எனவே செப்டம்பர் 19-ம் தேதிக்குள் அந்த மாவட்டத்தில் காலியாக உள்ள இடங்களுக்குத் தகுதியான நபர்களின் பெயர்களை மாவட்டச் செயலாளர்கள் பரிந்துரை செய்ய வேண்டும். இந்தப் பரிந்துரையில் சும்மா மாமன், மச்சான் அங்காளி, பங்காளி’ன்னு பொறுப்பு கொடுக்காமல், அனைத்து சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பொறுப்பு கொடுக்கவேண்டும். யாராவது பூத் கமிட்டி அமைப்பதில் மெத்தனமாக இருந்தால் அவர்களைக் கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கம் முடிவு செய்திருக்கிறோம்’ என்று அதிரடியாக பேசினார்” என்றனர் விரிவாக.

அ.தி.மு.க-வின் வழக்கத்துக்கு மாறாக மா.செ.க்களை தலைமை கழக நிர்வாகிகள் கவனிப்பார்கள் என்று எடப்பாடி கூறியிருப்பது நிர்வாகிகள் மத்தியில் சூட்டை கிளப்பி இருக்கிறது. இதுகுறித்து எடப்பாடிக்கு நெருக்கமான முன்னாள் அமைச்சர் ஒருவரிடம் பேசினோம். ” கொள்கை, கோட்பாடு எந்த அளவுக்கு முக்கியமோ அந்தளவுக்கு பூத் கமிட்டி மிகவும் முக்கியமென்பதுதான் எடப்பாடியின் எண்ணம். அதேபோல, ஒருவேளை ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத்தை மத்திய பா.ஜ.க அரசு அமல்படுத்தினால் நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தல் வரும். அதற்குள் கட்சியை தயார்ப்படுத்த வேண்டும் என்பதால்தான் இவ்வளவு மெனக்கிடலும்.

எடப்பாடி பழனிசாமி

ஆனால், மா.செ.க்கள் ஏனோதானோவென்று செய்வதால்தான், அவர்களை கண்காணிக்க குழு அமைக்க எடப்பாடி திட்டமிட்டு இருக்கிறார். அதன்படி, ஏழு முதல் பத்து மாவட்டங்களை கண்காணிக்க ஒரு குழு என்ற அடிப்படையில் 10 குழுக்கள் வரை அமைக்கப்பட உள்ளது. இந்த குழுவில் முன்னாள் மா.செ., தலைமை கழக நிர்வாகிகள், சீனியர்கள் இடம் பெறுவார்கள். மா.செ.களிடமிருந்து லிஸ்ட் வந்ததும் அது சரிபார்க்கப்படும். இந்த மேற்பார்வை குழுவோடு மா.செ.க்களை கண்காணிக்க ரகசிய குழுவும் அமைக்கப்பட உள்ளது. இந்த குழுதான் அ.தி.மு.க-வின் உளவுத்துறை என்றே சொல்லலாம். இந்த குழு கொடுக்கும் புள்ளிவிவரங்களை வைத்துதான், மா.செ.க்கள் மாற்றம் இருக்கும். மேலும், நிர்வாகிகள் மத்தியில் இருக்கும் பிரச்னைகளை பஞ்சாயத்து செய்ய வேலுமணி மாநிலம் முழுவதும் பயணிக்க இருக்கிறாராம். மேலும்,  ஆட்சியின் மீதான அதிருப்தியை மறைக்க தி.மு.க சனாதானத்தை கையில் எடுத்து இருக்கிறது. இதில் அதிமுக தனது கருத்தை சொன்னால், அதை வைத்தும் தி.மு.க அரசியல் ஆதாயம் தேடிக்கொள்ளும். எனவே சனாதானம் குறித்து யாருமே எந்தக் கருத்தும் சொல்ல வேண்டாம் என்று எடப்பாடி கறாராக சொல்லிவிட்டார். ” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.