North Korea to Russia: கிம் ஜாங் உன்னின் `அச்சமும்' மணிக்கு 59 கி.மீ தாண்டாத கவச ரயில் பயண கதையும்!

உலக அளவில் தங்களுடைய அணு ஆயுத சக்திகளால் அமெரிக்காவை அச்சுறுத்தும் நாடுகளில் ஒன்றாக வடகொரியா இருந்து வருகிறது. அதிலும், எதிர்பாராத நேரத்தில் அமெரிக்காவை எச்சரிக்கும் வகையில் திடீர் திடீரென அணு ஆயுத சோதனைகளை மேற்கொள்வது என தன்னுடைய அடுத்தகட்ட நகர்வுகள், பாதுகாப்பு தொடர்பான விஷயங்களை ரகசியமாக வைத்திருத்தல் போன்றவற்றில் அதிபர் கிம் ஜாங் உன் (Kim Jong Un) கவனமாக இருந்துவருகிறார்.

கிம் ஜாங் உன்

தன்னைப் பற்றிய தகவல்கள், பாதுகாப்பு வசதிகள் போன்றவற்றில் எவ்வளவு ரகசியமாக இருக்கிறாரோ, அதைவிடவும் சின்ன சின்ன தவறுகளுக்கும் கடுமையான தண்டனைகளை விதித்து மக்களை எப்போதும் ஒருவித அச்சத்திலேயே வைத்திருப்பார் கிம் ஜாங் உன். இத்தகைய சூழலில், ஆயுதப் பேச்சுவார்த்தை குறித்து ரஷ்ய அதிபர் புதினை, கிம் ஜாங் உன் இந்த மாதம் சந்திக்கவிருப்பதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் அதிகாரியொருவர் தெரிவித்திருந்தார்.

அதற்கேற்றவாறே, கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் வெளிநாட்டு பயணமாக, ரஷ்யாவுக்குச் சென்று அதிபர் புதினை சந்திக்கவிருக்கிறார் கிம் ஜாங் உன். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் வடகொரியாவிலிருந்து ரஷ்யா வரை சுமார் 1,180 கிமீ தொலைவை, மணிக்கு 59 கி.மீ வேகத்துக்கு மேல் செல்ல முடியாத கனமான, அதிக பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய சொகுசு ரயிலில் சுமார் 20 மணிநேர பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார் கிம் ஜாங் உன். மேலும், ரயில் முழுவதும் ராணுவ அதிகாரிகள் படை சூழ பாதுகாப்புடன் கிம் ஜாங் உன் சென்றிருக்கிறார்.

கிம் ஜாங் உன் – புதின்

மணிக்கு 300 கி.மீ மேல் செல்லும் புல்லட் ரயில், உலகின் எந்த நாடுகளுக்கும் செல்லும் விமான வசதி போன்றவை வந்துவிட்ட இந்த காலத்தில், மணிக்கு 59 கி.மீ கூட தாண்டாத ரயிலில் கிம் ஜாங் உன் சென்றது ஏன், அவ்வளவு அச்சமா என்ற கேள்வி எழுவதில் ஆச்சர்யமில்லை. ஆனால் கிம் ஜாங் உன், விமான பயணத்தை விரும்பாமல், ரயில் பயணத்தை விரும்புவதற்குப் பின்னால் இருக்கும் கதைகளும், அதற்கான காரணிகளும் சற்று ஆச்சர்யமானவையே.

கிம் ஜாங் உன்னின் தந்தையான கிம் ஜாங் இல் (Kim Jong Il) மற்றும் தாத்தா கிம் இல் சுங் (Kim Il Sung) ஆகியோர், வானில் பறக்க அச்சப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி தென்கொரிய ஊடகங்கள், சோதனை ஓட்டத்தின் போது தங்கள் ஜெட் வெடித்ததைக் கண்டதிலிருந்து கிம் ஜாங் இல்லுக்கும், கிம் இல் சுங்குக்கும் அந்த பயம் தொற்றிக்கொண்டதாக முன்பு தெரிவித்திருக்கின்றன. அதேபோல், அந்த சம்பவத்துக்குப் பிறகு, 1986-ல் கிம் இல் சுங் சோவியத் யூனியனுக்குப் விமானத்தில் சென்றதே, கடந்த மூன்று தசாப்தங்களில், வடகொரிய தலைவர் ஒருவர் வெளிப்படையாக மேற்கொண்ட விமானம் பயணம் என்று சொல்லப்படுகிறது. மேலும், கடந்த 2001-ல் புதினை சந்திக்கும் விதமாக ரஷ்யாவுக்குச் செல்ல 10 நாள்கள் ரயில் பயணம் மேற்கொண்டார் கிம் ஜாங் இல்.

கிம் ஜாங் உன்

இருப்பினும் கிம் ஜாங் உன், சுவிட்சர்லாந்தில் தனது பள்ளி நாட்களின்போது அடிக்கடி விமானத்தில் பயணித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், கடந்த 2011-ல் வடகொரியாவின் அதிபராகப் பதவியேற்றுக்கொண்ட கிம் ஜாங் உன், 2018-ல் அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை சிங்கப்பூரில் சந்திப்பது உட்பட சில சமயங்களில் விமான பயணத்தை அவர் தேர்வு செய்ததாகக் கூறப்படுகிறதே தவிர அதிகாரபூர்வமாக விமான பயணம் குறித்த அறிக்கைகள் எதுவுமில்லை. தற்போது ரஷ்யாவுக்கு விமானத்தில் செல்லாமல், ரயிலிலேயே சென்ற கிம் ஜாங் உன்னுக்குப் பின்னால், அவரின் தந்தை, தாத்தா ஆகியோர்களின் விமான வழி பயண அச்சங்களே காரணங்களே இருப்பதாகச் சொல்லப்படுகிறது. மேலும் சர்வதேச எல்லைகளை கடக்கும் நிலை ஏற்படுவதால், பாதுகாப்பு காரணங்களுக்காக விமான போக்குவரத்தை அவர் விரும்புவதில்லை என்கிறார்கள்.

கிம் ஜாங் உன் பயணித்த ரயிலின் சிறப்பம்சங்கள் என்ன?

கிம் ஜாங் உன் பயணித்த இந்த பச்சை நிற ரயில் மொத்தமாக 90 பெட்டிகள் கொண்டது என்கிறார்கள். அனைத்து பெட்டிகளுமே குண்டு துளைக்க முடியாதவை. ரயிலினுள் யார் யார் இருக்கிறார்கள் என்பது வெளியில் தெரியாத வகையில் ரயிலின் ஜன்னல்களுக்கு வண்ணமடிக்கப்பட்டிருக்கின்றன.

கிம் ஜாங் உன்

மேலும் ரயிலுக்குள் இருப்பவர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக, விலையுயர்ந்த பிரெஞ்ச் ஒயின், இரால் மற்றும் பன்றி இறைச்சி பார்பிக்யூவைக் கொண்டு செல்லும் உணவகமும் இருக்கிறது. இவை தவிர, ஆலோசனை நடத்துவதற்கான அறை, படுக்கையறை, செயற்கைக்கோள் தொலைபேசிகள், தொலைக்காட்சிகள் போன்றவையும் ரயிலில் இருக்கின்றன. ரயிலின் எடையும் மிக மிக அதிகம்.

கிம் ஜாங் உன்

மணிக்கு 59 கி.மீ வேகத்தில் மட்டுமே இந்த ரயில் நகரும். அதேபோல் ரயிலினுள் இருக்கும் அதிகாரிகளும் பாதுகாப்பு பணியில் மிகவும் தீவிரமானவர்கள். இவர்கள், தாங்கள் பயணிக்கும் வழித்தடங்கள், ரயில் நிலையங்கள் போன்றவற்றில் வெடிகுண்டுகள் இருக்கின்றனவா என்பவற்றை ஸ்கேன் செய்கின்றனர். இந்த ரயில் எந்த அளவுக்குப் பாதுகாப்பானதோ, அதே அளவுக்கு சொகுசானதும் கூட. விமானத்தை விட கவச ரயில் அதிக பாதுகாப்பையும் ஆடம்பரத்தையும் வழங்குகிறது என்று கிம் ஜாங் உன் நம்புகிறார்.

மேலும், மொத்தம் மூன்று ரயில்கள் பயணிப்பதாகவும் ஒரு தகவல் சொல்லப்படுகிறது. முதல் ரயில், பாதையில் எந்த தடையும் இல்லை என்பதை உறுதி செய்யும் எனவும் மூன்றாவது ரயிலில் பாதுகாப்பு வீரர்கள் குழு பயணிக்கும் எனவும் ஒரு தகவல் இருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.