வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ஆங்கிலேயர் காலத்தில் அமல்படுத்தப்பட்ட, தேச துரோக சட்டப் பிரிவை எதிர்க்கும் வழக்கை, உச்சநீதிமன்றத்தின் அரசியல்சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சியின்போது, 1890ல் இந்திய தண்டனை சட்டத்தின், 124ஏ பிரிவு அமலுக்கு வந்தது. தேச துரோக சட்டப் பிரிவு என்று கூறப்படும் இதன்கீழ், அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்க முடியும். இந்திய தண்டனைச் சட்டம் அமலுக்கு வந்து 30 ஆண்டுகளுக்குப் பின், நாடு சுதந்திரம் பெறுவதற்கு 57 ஆண்டுகளுக்கு முன், இது நடைமுறைக்கு வந்தது.
இந்தச் சட்டப் பிரிவு தவறாக பயன்படுத்தப்படுவதாக, உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. இவற்றை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்தாண்டு மே 11ல் உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி, இந்த சட்டப் பிரிவை தொடர்வது குறித்து ஆய்வு நடத்தும்படியும், அதுவரை இந்தச் சட்டப் பிரிவின் கீழ் எந்த வழக்கும் தொடரக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டது.மேலும், ஏற்கனவே தொடரப்பட்டுள்ள வழக்குகளிலும், விசாரணை நடத்தவோ, நடவடிக்கை எடுக்கவோ கூடாது என்றும் உத்தரவில் கூறப்பட்டது. கடந்த மே 1ல் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்த சட்டப் பிரிவை திருத்துவது குறித்த மறுஆய்வு செய்யப்பட்டு வருவதாக, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, இந்திய தண்டனை சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக புதிய சட்டங்கள் அமல்படுத்துவதற்கான மசோதா, கடந்த ஆக., 11ல் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சூழ்நிலையில், தேசதுரோக சட்டப் பிரிவை எதிர்க்கும் வழக்குகள், இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை, பெரிய அமர்வுக்கு மாற்றும் முடிவை தள்ளி வைக்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் வாதிடப்பட்டது.
ஆனால், இதனை ஏற்க மறுத்த நீதிமன்றம், தேச துரோக சட்டப்பிரிவை எதிர்க்கும் வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றவும், இதற்காக 5 நீதிபதிகள் கொண்ட அமர்வை அமைக்க தேவையான ஆவணங்களை தலைமை நீதிபதியிடம் சமர்ப்பிக்கவும் பதிவாளருக்கு உத்தரவிட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement