தி.மு.க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், `கொரனோ, டெங்குபோல சனாதனத்தை ஒழிக்க வேண்டும்’ என்று கடந்த வாரம் பேசியது, பா.ஜ.க மற்றும் வலதுசாரி அமைப்புகளால் தேசிய அளவில் பெரும் விவாதமாக்கப்பட்டது. இதில் ஒருபக்கம் பீகார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காவல் நிலையங்களில் உதயநிதிக்கு எதிராகப் புகார்கள் பதிவாக, இன்னொருபக்கம் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முதல் பா.ஜ.க முதலமைச்சர்கள், அமைச்சர்கள், தலைவர்கள் என பலரும் விமர்சித்தும், கண்டனம் தெரிவித்தும் வந்தனர்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/GridArt_20230907_123935284.jpg)
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைகூட இந்த விவகாரத்தில் தி.மு.க-வை எதிர்த்து சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார். அதன் தொடர்ச்சியாக தற்போது பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, இந்த சனாதன விவகாரம் சோனியா காந்தி, ராகுல் காந்தியின் ஆகியோரின் திட்டமிட்ட வியூகம் எனச் சாடியிருக்கிறார்.
இது குறித்து நட்டா தனது ட்விட்டர் பக்கத்தில், “மும்பையில் இந்தியா கூட்டணி கூட்டம் முடிந்த இரண்டு நாள்களுக்குப் பிறகு வெளிவந்த உதயநிதி ஸ்டாலினின் பேச்சு, சனாதனம்மீதான பிரியங்க் கார்கேவின் தாக்குதல், சனாதன தர்மத்துக்கு எதிராக இந்தியா கூட்டணி உருவானது என்று தி.மு.க அமைச்சர் ஏற்றுக்கொண்டது ஆகியவை எல்லாம் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரால் திட்டமிடப்பட்ட காங்கிரஸின் வியூகம். இது குறித்து காங்கிரஸும், இந்தியா கூட்டணியும் தங்களின் கருத்தை தெளிவுபடுத்த வேண்டும்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/WhatsApp_Image_2023_04_18_at_9_28_44_PM.jpeg)
எந்தவொரு மதத்தைப் பற்றியும் ஆட்சேபனைக்குரிய அறிக்கைகளை வெளியிடுவதற்கு, அரசியலமைப்புச் சட்டத்தில் உரிமை இருக்கிறதா… அரசியலமைப்பின் விதிகள் பற்றி இந்தியா கூட்டணிக்குத் தெரியாதா… அன்பின் பெயரில் சனாதன தர்மத்தின்மீதான வெறுப்பை ஏன் விதைக்கிறார்கள் என்பதை இந்தியா கூட்டணி, காங்கிரஸ், சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் கூற வேண்டும். அதிகாரத்துக்காகப் பிரித்தாளும் சூழ்ச்சியை அவர்கள் கையிலெடுத்திருக்கிறார்கள்” என்று விமர்சித்திருக்கிறார்.