G20: ’இந்தியாவுக்கு பதில் பாரத்’ – சர்வதேச தலைவர்கள் முன்னிலையில் உள்நாட்டு அரசியல் ஏன்?

2023-ம் ஆண்டிற்கான G20 உச்சி மாநாடு இந்தியாவின் தலைமையில் டெல்லியில் நடந்துமுடிந்திருந்தாலும், அவை ஏற்படுத்திய விவாதங்கள் இன்னும் முடிந்தபாடில்லை. மாநாட்டில் பங்கேற்கும் ஒவ்வொரு நாட்டின் பிரநிதிகள் அமரும் இடத்தில் அவர்களது நாடுகளின் பெயர் போட்டிருப்பது வழக்கம். இந்திய பிரதிநிதியாக தலைமை தாங்கிய பிரதமர் மோடிக்கு முன் ’பாரத்’ எனப் போட்டு உள்ளூர் அரசியலை உலக அரங்கில் பா.ஜ.க வெளிப்படுத்தியிருப்பதே தற்போதை ஹாட் டாப்பிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது.

ஜோ பைடன் – மோடி

நம்மிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் இனியன் ராபர்ட் “ பா.ஜ.க-வை தோற்கடிக்க வேண்டும் என உருவாகியிருக்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு I.N.D.I.A என பெயரிட்டு செயல்பட்டு வருகிறோம். இது பா.ஜ.க-வுக்கு பெரும் பயத்தை தந்திருக்கிறது. I.N.D.I.A கூட்டணி மக்களை சென்றடைந்திருக்கிறது என்பதால்தான் நாட்டின் பெயரையே ’பாரத்’ என மாற்ற முற்படுகிறது பா.ஜ.க அரசு. பாரத் என்ற பெயரை காங்கிரஸ் ஏற்க மறுக்கவில்லை என்றாலும் தற்போதைய இந்த மாற்றத்துக்கு காரணம் I.N.D.I.A கூட்டணி என்பதில் சந்தேகமில்லை.

நாம் தற்போது எழுப்பும் கேள்வியே G20 மாநாட்டில் பாரத் என போடுகிறார்களே, அதிகாரப்பூர்வமாக நாட்டின் பெயர் மாற்றப்பட்டுள்ளதா… அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறதா… நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுவிட்டதா… இல்லையே.

இனியன் ராபர்ட்

இப்படி எதுவுமே செய்யாமல் உலக நாடுகள் பங்கேற்கும் கூட்டத்தில் தான்தோன்றித்தனமாக செயல்படுவது, பா.ஜ.க எந்த அளவுக்கு சட்டதிட்டங்களையும் அரசியலமைப்பையும் பின்பற்றுகிறதென தெரிந்துகொள்ள முடிகிறது. I.N.D.I.A கூட்டணியை அரசியல் மேடைகள் எதிர்ப்பது உரிமை. ஆனால் G20 மாநாட்டின் மேடைகளும் அரசியல் செய்வோம் என்பது கீழ்த்தரமான செயல்” என்றார் சூடாக

கார்த்தியாயினி

இதுகுறித்து விளக்கம்கேட்க பா.ஜ.க மாநிலப் பொதுச்செயலாளார் கார்த்தியாயினிடம் பேசினோம், “G20 மாநாட்டை சிறப்பாக நடத்தி உலக அரங்கில் நாட்டை தலை நிமிர செய்துள்ளார் பிரதமர் மோடி. அதனை ஏற்க மனமில்லாமல் எதாவது குறைகூறி கொண்டிருக்கின்றன எதிர்க்கட்சிகள். G20 மாநாட்டை வைத்து அரசியல் செய்வதே எதிர்க்கட்சிகளின் கூட்டணிதான். இந்தியா என்றால் பாரத். பாரத் என்றால் இந்தியா என்பது உலகறிந்த விஷயம். India, that is Bharat” என்ற வாசகம் அரசியலமைப்பு சட்டத்திலேயே இருக்கிறதே. பிறகென்ன பிரச்னை. G20 மாநாட்டால் பா.ஜ.க-வுக்கு கிடைத்திருக்கும் நற்பெயரை களங்கப்படுத்தும் நோக்கில் சிறுபிள்ளைத்தனமான அரசியல் செய்வது எதிர்க்கட்சிகள் தான்” என்றார் சுருக்கமாக.

மோடி

நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளர்கள் சிலர் “’அரசியல் கட்சிகள் அரசியல் செய்யாமல் அவியலா செய்யும்’ என கிண்டலாக கேட்பாளர்கள் அரசியல்வாதிகள் சிலர். அதுசரி என்றாலும் இடம் பொருள் ஏவல் அவசியமானது. I.N.D.I.A என எதிர்க்கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு பெயர் வைத்துக் கொண்டதால் அவர்களுக்கு செக் வைக்க பாரத் என போட ஆரம்பித்திருக்கிறது பா.ஜ.க அரசு. ஆனால் அதனை G20 மாநாட்டில் பிரதிபலிக்க வேண்டிய அவசியமென்ன.. ’பாரத்’ என ஏன் போட்டிருக்கிறார்கள் என உலக நாடுகள் உற்று நோக்கி விவகாரத்தை விசாரிக்கும். இறுதியில் எதிர்க்கட்சிகளுக்கு பயந்து அவ்வாறு போட்டிருக்கிறார் என்ற தகவல் கிடைத்தால் அது பா.ஜ.க-வுக்கு தான் பின்னடைவு” என்றனர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.