பெங்களூரு : ”சிறு சிறு பிரச்னைகளுக்கு கூட என்னை சந்திக்க மக்கள் வருகின்றனர். பின் நீங்கள் இருப்பதில் என்ன பயன்?” என, மாவட்ட கலெக்டர்களிடம், முதல்வர் சித்தராமையா கேள்வி எழுப்பினார்.
மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரிகளுடன் முன்னேற்ற ஆய்வுக் கூட்டம் பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் முதல்வர் சித்தராமையா பேசியதாவது:
முதல்வரான பின், பல மாவட்டங்களுக்கு சென்றேன். அப்போது பொது மக்கள் என்னிடம் கோரிக்கைகளை கொடுக்கின்றனர்.
மாவட்டம், தாலுகா அளவில் தீர்க்கப்பட வேண்டிய சிறு பிரச்னைகளுக்கு கூட, பஸ் ஏறி வந்து என்னை சந்திக்கின்றனர். எனவே, நீங்கள் இருப்பதால் என்ன பயன்?
உள்ளூரிலேயே மக்கள் தொடர்பு கூட்டம் நடத்தி, அங்கேயே தீர்வு காணுங்கள். சில பிரச்னைகளுக்கு ஒரு வாரத்திற்குள் தீர்வு காண வேண்டும். ஒரு வாரத்திற்குள் அந்த பிரச்னை முடிவுக்கு வந்ததா, இல்லையா என்பதை சரிபாருங்கள்.
கர்நாடகாவில் மாற்றம் வேண்டும் என்பதற்காக அரசை மாற்றவில்லை. அதிக எதிர்பார்ப்புகளுடன் முந்தைய அரசை மாற்றி, எங்களை ஆட்சியில் அமர்த்தி உள்ளனர்.
வளர்ச்சியை எதிர்பார்த்து மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அதிகாரிகள் செயல்பட வேண்டும். எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் அனைவரும் மக்கள் ஊழியர்கள். அனைவருக்கும் இந்த பொது அறிவு இருக்க வேண்டும். நாம் அரசர்கள் அல்ல.
தாலுகா, உட்கோட்ட அலுவலர், மாவட்ட கலெக்டர் நீதிமன்றங்களில் வரும் விண்ணப்பங்கள், ஐந்து ஆண்டுகளாகியும் நிலுவையில் உள்ளது என்றால், நீங்கள் சரியாக பணியாற்றவில்லை என்று அர்த்தம்.
எவ்வளவு காலம் தாமதம் ஆகிறதோ, அதுவும் ஊழல் தான். எனவே மூன்று மாதங்களுக்குள் தீர்வு காண வேண்டும்.
தாசில்தாருக்கு விண்ணப்பம் வந்தால், மூன்று மாதங்களுக்குள் தீர்க்க வேண்டும். துணை மண்டல அதிகாரிகளுக்கு வந்தால் ஆறு மாதங்களுக்கும்; மாவட்ட கலெக்டர்கள் ஓராண்டுக்குள்ளும் தீர்க்க வேண்டும்.
மாவட்ட கலெக்டர்கள் இடம் வரும் வழக்கை தேவையில்லாமல் ஒத்திவைப்பது; கட்சியினரை காத்திருக்க வைப்பது; வாதங்களை கேட்டு தீர்ப்பு எழுதுவதில் தாமதம் செய்யக்கூடாது.
வழக்கை தீர்ப்பதில் தாமதம் செய்வதை எங்கள் அரசு பொறுத்துக்கொள்ளாது. அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்