பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை `என் மண், என் மக்கள்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பயணத்தைத் தொடங்கியவர், இன்று மாலை நிலக்கோட்டைக்கு வந்தார். நிலக்கோட்டையில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் பகுதியில் தொடங்கி ஈ.பி காலனி, சேர்மன் நகர், மாரியம்மன் கோயில் தெரு, பஜார் தெரு வழியாக நால் ரோடு வரை நடைப்பயணம் மேற்கொண்டார்.
இதையடுத்து நிலக்கோட்டையில் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “மதுரையின் மல்லி என்றால் நிலக்கோட்டை மல்லிதான். மல்லி சாகுபடியில் 1 லட்சம் பேர் நிலக்கோட்டையில் பயன்பெறுகின்றனர். மதுரை மல்லிக்கு புவிசார் குறியீடு வழங்கியிருக்கிறார் மோடி. விவசாய பூமியான நிலக்கோட்டை விவசாயிகளை வாழ வைக்கின்ற பூமியாகும்.
திண்டுக்கல் மாவட்டம்மீது பிரதமர் மோடிக்கு தனி பிரியமும், பாசமும் உண்டு. தமிழகத்திற்கு 11 மருத்துவக் கல்லூரிகள் கொடுத்தபோது திண்டுக்கல் மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரியையும் பிரதமர் மோடி கொடுத்துள்ளார். காந்தி கிராம பல்கலைக்கழகம் மிக முக்கியமானது. திண்டுக்கல் மண்ணிற்கு வர வேண்டுமென பட்டமளிப்பு விழாவிற்கு வந்தார். இவ்வாறு சிறப்பு கவனம் கொடுக்கக்கூடிய பகுதியாக திண்டுக்கல் மாறிவிட்டது.
நிலக்கோட்டை மக்களைச் சந்தித்தபோது, இளைஞர்கள் படித்துவிட்டு வேலை வாய்ப்பில்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர். அந்தளவிற்கு வேலை வாய்ப்பு இல்லாத சூழலை இந்த திராவிட மாடல் அரசு உருவாக்கியுள்ளது. ஸ்டாலின் குடும்பத்திற்காக திராவிட மாடல் அரசியல் நடக்கிறது. மகன், மருமகனுக்காக ஓர் ஆட்சி இங்கு நடக்கிறது. மக்களுக்காக திராவிட மாடல் அரசு செயல்படவில்லை.
தமிழக அமைச்சரவையிலுள்ள மூன்றில் ஒரு பங்கு அமைச்சர்கள்மீது குற்றச்சாட்டு உள்ளது. இந்தியாவில் எங்கும் இல்லாத அளவிற்கு ஊழல் குற்றச்சாட்டுகள் இங்கு உள்ளன. எப்படி தமிழ்நாடு முன்னேற்றப் பாதைக்குச் செல்லும்… இங்குள்ள 35 அமைச்சர்களில் 11 அமைச்சர்கள்மீது ஊழல் வழக்குகள் உள்ளன. தி.மு.க., அரசுக்கு பிரதமர் மோடிமீது மட்டுமே பயம், அவர் தட்டிக்கேட்பார் என்ற பயத்தில்தான் தி.மு.க., அரசு கொஞ்சமாவது செயல்படுகிறது.
நிலக்கோட்டையில் ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் படிக்கும் 7 மாணவிகளை மது அருந்தியற்காக இடைநீக்கம் செய்துள்ளனர். தமிழகத்தில் எது வளர்ந்துள்ளதோ இல்லையோ, டாஸ்மாக் வளர்ந்துள்ளது. அரசுக்கு இதில்தான் வருவாய் கிடைக்கிறது. இதுதான் தமிழகத்தின் அவல நிலை. குடிக்கும் கலாசாரம் வளர்ந்துள்ளது. பட்டி, தொட்டி எங்கிலும் பெண்களின் அழுகுரல் கேட்கிறது. டாஸ்மாக்கை இழுத்து மூட வேண்டும். டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன் போன்றவர்கள்தான் சாராய ஆலை நடத்துகின்றனர். இவர்கள் எப்படி டாஸ்மாக்கை இழுத்து மூடுவார்கள்.
டாஸ்மாக் மூலமாக அரசுக்கு வரக்கூடிய வருமானம் 25 சதவிகிதம் உயர்ந்துள்ளது. சம்பாதிக்கக்கூடிய பணத்தை பெரும்பாலும் டாஸ்மாக்கில் செலவழிக்கின்றனர். குடிகார சமுதாயமாக தமிழகத்தை மாற்றிக் கொண்டிருக்கின்றனர். இதே தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தபோது, டாஸ்மாக்கை இழுத்து மூடுவோம் என கபட நடகம் ஆடிவிட்டு, தற்போது பெண்களின் அழுகைக் குரலைக் கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழகத்தில் அனைத்து பெண்களுக்கும் உரிமைத்தொகை தருவோம் என்று கூறினார்கள். தமிழகத்தில் உள்ள குடும்பத் தலைவிகளின் எண்ணிக்கை மட்டுமே 2 கோடி 25 லட்சம். முதலில் 75 லட்சம் பேருக்கு மட்டும் என்றார்கள், பா.ஜ.க வலியுறுத்ததால் 1 கோடி பேருக்கு வழங்குவோம் என்றார்கள். மகளிர் உரிமைத்தொகை என்பது பெண்கள் எல்லோருக்குமான உரிமை. அதை எல்லோருக்கும் கொடுக்க வேண்டும்.
தி.மு.க-வைப் பொறுத்தவரை மூன்றே மூன்று கொள்கைகள்தான். `சாராயத்தை விற்போம், சனாதனத்தை வேரறுப்போம், தேர்தலுக்கு முன்பு பல்டி அடிப்போம்’ இவைதான் அவை. தி.மு.க நிலக்கோட்டை தொகுதிக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றவில்லை. தேர்தல் வருகின்றது என்ற ஒரே காரணத்திற்காக முதலமைச்சர் ஸ்டாலின் மறுபடியும் வாக்குறுதிகளை நிறைவேற்றியதாகப் பொய் கூறுகிறார்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY