லக்னோ: சனாதனம் நம் தேசிய மதம் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசத்திலிருந்து மெக்கா சென்று ஹஜ் கடமையாற்றுபவர்களை சவுதி அரேபியா இந்துக்கள் என்றே அழைக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள மகாகாளேஸ்வர் கோயிலில் பிரார்த்தனை செய்ய வந்த யோகி ஆதித்யநாத் இதனைத் தெரிவித்தார். தமிழக அமைச்சர் உதயநிதியின் பேச்சு சர்ச்சையான நிலையில் ஆதித்யநாத், சனாதனம் குறித்து பேசியுள்ளார். அவர் இன்று பேசியதாவது. இந்தியாவில் வசிக்கும் சிலர் இன்னமும் சனாதனத்தை அவமதிக்கிறார்கள் என்பது துரதிர்ஷ்டவசமானது. சனாதனம் என்பது நம் பாரதத்தின் தேசிய மதம். அதன் நிலைத்தன்மையை யாரும் கேள்வி கேட்க முடியாது.
ஆண்டாண்டு காலமாக விமர்சனத்துக்குள்ளாகும் சனாதனம் போலவே இறைவனின் இருப்பும் இங்கே கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. இன்றும் சனாதனத்தை விமர்சிப்பவர்கள் இந்திய மதிப்பீடுகளை, கோட்பாடுகளை, மாண்புகளைத் தாக்குவதை தவறவிடுவதில்லை.
ராவணன் கூட இறைவனை எதிர்த்தார். ஆனால், ராவணனின் அகந்தை அழிந்தது. முகாலயப் பேரரசர் பாபர், ராமர் கோயிலை சிதைக்க நினைத்தார். ஆனால், ராம ஜென்மபூமியில் ஒரு பெரிய பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்படுகிறது. இந்து என்பது மதம் சார்ந்த வார்த்தை அல்ல அது இந்தியர்களின் கலாச்சார அடையாளம்.
இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசத்திலிருந்து சவுதி அரேபியாவுக்கு ஹஜ் பயணம் செல்வோரை அந்நாடு இந்துக்கள் என்றே அழைக்கிறது. ஆனால், இங்கே சிலர் இந்து அடையாளத்தை குறுக்குகின்றனர். அது துரதிர்ஷ்டவசமானது.
அண்மையில் இந்தியா வந்த பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக், தனது இந்து அடையாளத்தை பெருமிதத்துடன் பகிர்கிறார். அவர் கோ மாதாவை வணங்குவதையும், கோயிலுக்குச் செல்வதையும், ஜெய் ஸ்ரீராம் அல்லது ஜெய் சியா ராம் சொல்வதையும் குறைத்து மதிப்பிடவில்லை. ஏனெனில், அவரது வேர் சனாதனத்தில் இருக்கிறது. இவ்வாறு யோகி ஆதித்யநாத் பேசினார்.